தனித்தீவான தெங்குமரஹாடாவில் கரோனாவைத் தடுக்கப் போராடும் தனி ஒருவர்!

தனித்தீவான தெங்குமரஹாடாவில் கரோனாவைத் தடுக்கப் போராடும் தனி ஒருவர்!
Updated on
3 min read

நீலகிரி மாவட்டத்தின் தனித்தீவான தெங்குமரஹாடாவில் கரோனாவைத் தடுக்கத் தனி ஒருவராகப் போராடி வருகிறார் மருத்துவர் அருண் பிரசாத். அவரது சேவையால் நெகிழ்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே கிராமமாகச் சுருங்கி நம் விரல் நுனியில் இருக்க, தொலைத்தொடர்பு வசதிக் குறைகளோடு, போக்குவரத்து வசதிகள் இல்லாமல், ஒரு கிராமமே கேட்பாரற்று ஒதுங்கிக் கிடக்கிறது.

நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான தெங்குமரஹாடாதான் அது. 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது இந்த கிராமம். இந்த கிராமத்துக்குச் செல்ல நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களைக் கடக்க வேண்டும்.

மேட்டுப்பாளையத்திலிருந்து சத்தியமங்கலம் வழியாக பவானி சாகர் சென்று, அங்கிருந்து சுமார் 25 கி.மீ. அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணிக்க வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் வளமான கிராமம் இது. கோடநாட்டில் காட்சிமுனையில் இருந்து பார்த்தால் தெங்குமரஹாடா இந்தியாவின் வரைபடம் போல மிகவும் அழகாகக் காட்சி தரும்.

அடர்ந்த வனத்துக்குள் பயணிக்கும் பேருந்துகள் தெங்குமரஹாடா கிராமத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு இடையில், கல்லாம்பாளையம் வழியாக ஓடும் மாயாறு குறுக்கிடுவதால் ஆற்றுக்கு முன்பாகவே பேருந்து நிறுத்தப்பட்டுவிடும். தண்ணீர் வரத்து குறைவாக இருந்தால் மட்டுமே பரிசல் மூலமாக மக்கள் கிராமத்துக்குள் நுழைகின்றனர்.

வேளாண்மையை பிரதானமாகக் கொண்டுள்ள இந்த கிராமத்தில் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவினரும் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் சேவையாற்றும் தபால்காரர் முதல் மருத்துவர்கள் வரை மக்களின் அன்புக்குப் பாத்திரமாவது வழக்கம்.

இதற்கிடையே கரோனா பரவல் தனித்தீவாக உள்ள இந்த கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. தெங்குமரஹாடா, புதுக்காடு, சித்திரம்பட்டி, அல்லிமாயார் மற்றும் கல்லம்பாளையம் ஆகிய கிராமங்களில் 1,470 மக்கள் வசிக்கின்றனர். கரோனா முதல் அலையில் தப்பிப் பிழைத்த இந்த கிராமத்தில், இரண்டாம் அலையில் 25 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

தெங்குமரஹாடாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்தான் இம்மக்களுக்கு மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண் பிரசாத், மக்களுக்குச் சேவை புரிந்து வருகிறார். இளம் மருத்துவரான இவர் கடந்த ஓராண்டாகத் தனது அர்ப்பணிப்பு மிக்க மருத்துவச் சேவையை இந்த எளிய மக்களுக்கு வழங்கி வருகிறார். இரவு, பகல் எதையும் பாராமல் பரிசலில் பயணித்து மக்கள் உயிரைக் காப்பாற்றிவரும் மருத்துவர் அருண் பிரசாத், தற்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் அயராது சேவையாற்றி வருகிறார்.

தினமும் வீடு வீடாகச் செல்லும் இவர், மக்களைச் சந்தித்து, அவர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கிறார். மேலும், அவர்களுக்குத் தொற்று தடுப்பு வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்.

இந்த கிராமத்தில் 25 நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தீவிர அறிகுறிகளுடன் இருந்தவர்களை இவரே மாயாற்றைக் கடக்க வைத்து 100 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள கோத்தகிரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார். இவரது இந்தச் சேவையை மருத்துவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர் அருண் பிரசாத் கூறும்போது, ''எனக்கு கோயம்புத்தூர்தான் சொந்த ஊர். நீலகிரி மாவட்டத்தில் சோலூர் மட்டத்தில் பணியமர்த்தப்பட்டடு, ஓராண்டு பணிபுரிந்தேன். தெங்குமரஹாடாவில் பணிபுரிந்து வந்த மருத்துவர் ஜெயமோகன் இறந்ததும், இந்த கிராமத்துக்கு வந்தேன். கரோனா முதல் அலையில் 9 மாதங்கள் கிராமத்திலேயே தங்கியிருந்தேன். தற்போது இரண்டு மாதங்களாக வெளியூர் செல்லாமல் இங்கேயே தங்கியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.

தெங்குமரஹாடா கிராமத்தில் கரோனா வைரஸ் பரவல் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, ''கிராமத்தில் தற்போது 25 நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 5 நபர்களுக்கு நோய் தீவிரமாக உள்ளது. இவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், குணமடைந்து வருகின்றனர். தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தினமும் கண்காணித்து, ஆலோசனைகள் வழங்கி வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

மேலும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அங்குள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வெளியே சென்று திரும்பும் மக்களைக் கண்காணித்து அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்போது தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த அங்குள்ள அரசுப் பள்ளி கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது என்று கூறிய மருத்துவர் அருண் பிரசாத், 'அவசரத் தேவைக்கு ஆரம்ப சுகாதார மையத்தில் இரு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன' என்று தெரிவித்தார்.

மருத்துவர் அருண் பிரசாத்தின் மருத்துவ சேவை குறித்து அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியோடு கூறும்போது, ''கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தெங்குமரஹாடாவில் நடைபெற்ற சிறிய விழாவின் மூலம் 25 பேர் கரோனா நோய்த் தொற்று ஏற்பட, அவர்கள் அனைவரையும் ஒற்றை ஆளாக நின்று வீடு வீடாகச் சென்று பேசி, பின்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

108 வாகனம் ஆற்றைக் கடந்து தெங்குமரஹாடா ஊருக்குள் வர முடியாத சூழலில், நோயாளிகளை வீட்டிலிருந்து அரசு வாகனத்தில் ஏற்றி ஆற்றுப்படுகைக்கு வந்து பின்பு, அவர்களின் கைகளைப் பிடித்து 108 வாகனத்தில் ஏற்றி, கோத்தகிரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்தார்'' என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in