தமிழகத்தில் சரிவர செயல்படாமல் இருக்கும் 50 உழவர் சந்தைகள் சீரமைப்பு: வேளாண் துறை அதிகாரி தகவல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் சரிவர செயல்படாமல்இருக்கும் 50 உழவர் சந்தைகளை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்காக ‘உழவர் சந்தை’ திட்டம் 1999-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு உரிய விலை

விவசாயிகள், நுகர்வோருக்கு இடையே இடைத்தரகர்கள் இருப்பதால் அவர்கள் அதிக லாபம்சம்பாதிக்கின்றனர். அதனால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைவான விலை கிடைக்கிறது. இந்த சுரண்டலைத் தடுப்பதற்காகவே உழவர் சந்தை தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், நுகர்வோருக்கு தரமான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் உரிய விலைகிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், காலையில் உழவர் சந்தைக்கு தங்களது விளை பொருட்களை எடுத்து வரும் விவசாயிகள், அவை விற்றுத் தீரும் வரை இருப்பதில்லை. அவர்கள் விவசாயப் பணிகளைக் கவனிப்பதற்காக அங்கிருக்கும் வியாபாரிகளிடம் விற்றுவிட்டுச் செல்கிறார்கள் என்ற குற்றச் சாட்டும் இருந்தது.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளில் உழவர் சந்தை உரிய முறையில் நடத்தப்படவில்லை என்ற புகார் கூறப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், திமுக முன்னாள் தலைவரும், முதல்வருமான கருணாநிதிதொடங்கிவைத்த உழவர் சந்தை திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்தவும், புதிய உழவர்சந்தைகளைத் திறக்கவும் தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக வேளாண்அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பணிகள் தொடக்கம்

தமிழகத்தில் 170 உழவர் சந்தைகள் உள்ளன. இவற்றில் 50 உழவர் சந்தைகள் உரிய முறையில் செயல்படவில்லை. கடந்த ஆட்சியில் உழவர் சந்தை திட்டத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.

அதனால்தான் அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் உட்பட 50-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் செயல்படவில்லை. இவற்றை உரிய முறையில் செயல்பட வைப்பது மற்றும் சரிவர இயங்காத உழவர் சந்தைகளை சீரமைப்பது ஆகிய பணிகள் தொடங்கியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in