

சென்னையில் நேற்று இரண்டாவது நாளாக போலீஸார், ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்தினர்.
கரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் 2 வார முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. வரும் 24-ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சில நாட்கள் இருந்த தளர்வுகள் தற்போது முழுமையாக கைவிடப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ளன.
உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோருக்கான தேவை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கை மதிக்காமல், பலரும் வாகனங்களில் சுற்றித் திரிந்தனர். இதையடுத்து சென்னைக்கு உள்ளேயே காலை 10 மணிக்குப் பிறகு ஒரு காவல் நிலைய எல்லையில் இருந்து மற்றொரு காவல் நிலைய எல்லைக்குள் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இதை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸார், ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக நேற்று முன்தினம் மட்டும் 1,700 வழக்குகளை பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய 980 இருசக்கர வாகனங்கள், 99 ஆட்டோக்கள், 33 இலகுரக வாகனங்கள் மற்றும் 10 இதர வாகனங்கள் உட்பட மொத்தம் 1,122 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் சட்டம் ஒழுங்கு போலீஸார் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,722 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 3,935 இருசக்கர வாகனங்கள், 302 ஆட்டோக்கள், 69 இலகுரக வாகனங்கள் உட்பட மொத்தம் 4,306 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 3,518 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தொடர்பாக 391 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அரசு அறிவித்த வழிகாட்டுதலை மீறி செயல்பட்ட 75 கடைகள் மூடப்பட்டு, ரூ.9 லட்சத்து 90,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. நேற்று இரண்டாவது நாளாக போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருந்தனர்.
இதற்காக சென்னைக்குள் 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணிக்குப் பிறகு வெளியே இ-பதிவின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கண்காணிப்பு பணிக்காக மட்டும் சென்னை நகரில் 205 இருசக்கர ரோந்து வாகனங்களும், 309 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.