கரோனாவால் இறந்தவரின் சடலத்தை எரியூட்ட பணம் வசூலிப்பு: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தினமும் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கடந்த 12 நாட்களில் மட்டும் 285 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்கள்உறவினர்களின் வேண்டுகோளின்படி ஆங்காங்கே உள்ள மயானங்களில் புதைக்கவும், எரிக்கவும் செய்கின்றனர். நகரப் பகுதிகளில் நகராட்சி சார்பில் மின் மயானத்தில் உடல் எரியூட்டப்படுகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு உடலையும் எரிக்க ரூ. 2 ஆயிரம்முதல் 5 ஆயிரம் வரை கூடுதலாக பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. பணம் தர மறுக்கும் பட்சத்தில் எரியூட்டுவதை தாமதப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களைப் பெற்றுத்தர பணம் கேட்கின்றனர். சடலத்தை பிணவறைக்கு கொண்டு செல்ல ரூ.500, பிணவறையில் சடலத்தைக் கையாள ரூ.500, உடலை ஏற்றிச் செல்லும் வாகனத்துக்கு ரூ.1,000, உடலை எரியூட்ட நகராட்சி மயானத்தில் ரூ.2,000, சுகாதார ஆய்வாளருக்கு ரூ.2,000 என பலரும் பணம் கேட்பதாகப் புகார்கள் வருகின்றன.

கண்துடைப்பு நாடகம்

மறைமலை நகர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்த ஒருவர் எரியூட்டப்படும் ஒவ்வொருஉடலுக்கும் ரூ.1,000 பணம் பெற்றுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்துடைப்புக்காக பணி மாற்றம் செய்துள்ளனர்.

இறந்த பிணத்தையும் வைத்து பணம் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே நிலை செங்கல்பட்டு நகராட்சியிலும் நடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in