கோடை மழை கைகொடுத்ததால் குமரியில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி தொடக்கம்: தேவைக்கேற்ப விதை நெல் கிடைப்பதால் விவசாயிகள் உற்சாகம்

குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் கன்னிப்பூ சாகுபடிக்காக டிராக்டர் மூலம் வயல்களை உழுது பண்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.   							     படம்: எல்.மோகன்.
குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் கன்னிப்பூ சாகுபடிக்காக டிராக்டர் மூலம் வயல்களை உழுது பண்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. படம்: எல்.மோகன்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை கைகொடுத்துள்ள நிலையில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி பணியை விவசாயிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கோடையிலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்த நிலையில், அரபிக் கடலில்உருவான டவ் தே புயல் தாக்கத்தால் பெய்த கன மழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 43.11 அடியாக உள்ளது. மற்ற அணைகளிலும் மழைக் காலத்தைப் போல் தற்போது நீர் இருப்புஉள்ளது.

குளங்கள் நிரம்பின

மேலும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2,040 குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் கன்னிப்பூ சாகுபடியை விவசாயிகள் முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.

இறச்சகுளம், திருப்பதிசாரம், தேரூர், சுசீந்திரம், பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம், வேம்பனூர், இரணியல், மணவாளக்குறிச்சி, பெரியகுளம் ஏலாஆகியவற்றில் நாற்று நடுவதற்காக உழவு செய்து, வயல்களை பண்படுத்தும் பணி நடந்து வருகிறது. 110 நாட்களுக்குள் அறுவடை பருவத்தை எட்டும் அம்பை 16, திருப்பதிசாரம் 5 ஆகிய நெல் ரகங்களை பயிரிட ஏதுவாக ஏற்கெனவே நாற்றங்கால்கள் அமைத்து விதைப்பு செய்திருந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்துக்குள் நடவு செய்யும் பருவத்தில் நாற்றுகள் வளர்ந்துள்ளன. இதனால் வரும்ஜூன் மாதத்துக்குள் 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட வயல்களில் நடவுப் பணி முடிந்து விடும்.

6,500 ஹெக்டேரில் சாகுபடி

கடந்த கும்பப்பூ பருவத்தைப் போன்றே 6,500 ஹெக்டேர் வயல்பரப்பில் நடவு மேற்கொள்ள வேளாண்துறை திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 2,000 ஹெக்டேர் வரை வயல்களை பண்படுத்தும் பணி வேகம் பிடித்துள்ளது. குளத்துப் பாசன பரப்புகளுக்கு தற்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லாததால் இரு வாரத்துக்குள் இவ்வயல்களில் நடவு செய்யப்படும். அதே நேரம் அடுத்த மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் திறந்த பின்னரே ஆற்றுப்பாசனத்தை நம்பியிருக்கும் வயல்களில் சாகுபடி பணி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘கடந்த கும்பப்பூ சாகுபடியின்போது அணைகளில் போதிய தண்ணீர் இருந்ததாலும், மழை கைகொடுத்ததாலும் நல்ல மகசூல் கிடைத்தது. அதுபோல் தற்போதைய கன்னிப்பூ பருவத்திலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கேற்ப அடுத்த மாதம் தொடங்கும் பருவ மழைக்கு முன்பாகவே தற்போது பெய்துள்ள கோடை மழை போதிய அளவில் கைகொடுத்துள்ளது.

பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதற்கு ஆயத்தமாகி வந்த விவசாயிகளும் தற்போது கன்னிப்பூ நெல் சாகுபடி பணிக்கு தயாராகி விட்டனர். ஊரடங்கு நேரத்திலும் விதை நெல்தட்டுப்பாடின்றி கிடைப்பது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in