Published : 10 Dec 2015 09:49 AM
Last Updated : 10 Dec 2015 09:49 AM

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாற்று சான்றிதழ்கள் வழங்க டிச.14 முதல் சிறப்பு முகாம்கள்: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மழை வெள்ளத்தின் காரணமாக கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்குமாறும் இதற்காக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் டிசம்பர் 14 முதல் இரண்டு வாரங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் முதல்வர் ஆணையிட்டுள்ளார். அவரது ஆணைக்கிணங்க, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் கல்விச் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்றிதழ் வழங்குவதற்காக அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, 8, 10 மற்றும் பிளஸ் 2 உட்பட அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் தேர்வுகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டயச் சான்றிதழ்களை மாணவர்களுக்கு இலவசமாக மாற்று சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். சிறப்பு முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் அரசு தேர்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு மாற்று கல்விச்சான்றிதழ்கள் உரிய முகாம்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்பட வேண்டும். இப்பணியில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

10-ம் வகுப்புக்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு விண்ணப்பங்களை பெற்று அதனை பள்ளிகளில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்க தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x