

வாலாஜா வட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக சேமிப்புப் பணம் ரூ.5,036-ஐ மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி - பூங்கொடி தம்பதியரின் மகள்களான நவீனா (12), ஷர்மிளா (10), மகன் யோகேஸ்வரன் (5) ஆகியோர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாங்கள் உண்டியலில் சேமித்து வந்த 5 ஆயிரத்து 36 ரூபாயை கரோனா நிவாரண நிதியாக வழங்க முன்வந்தனர்.
இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தாயார் பூங்கொடியுடன் வந்த மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் நிவாரண நிதியை வழங்கினர். உண்டியல் சேமிப்புப் பணத்தை வழங்கிய மாணவர்களை ஆட்சியர் பாராட்டினார்.