Last Updated : 19 May, 2021 08:11 PM

 

Published : 19 May 2021 08:11 PM
Last Updated : 19 May 2021 08:11 PM

கரோனாவால் இறந்தோரை சமுதாயச் சடங்கு முறைப்படி நல்லடக்கம் செய்யும் இஸ்லாமிய தன்னார்வலர்கள்

குடும்பத்தினர், உறவினர்களே தள்ளிப்போகும் நிலையில் கரோனா மரணங்களை சமுதாயச் சடங்கு முறைப்படி நல்லடக்கம் செய்யும் இஸ்லாமிய தன்னார்வலர்கள்

கரோனா தொற்றின் 2வது அலை வேகமெடுத்துள்ளது. இந்த அலையில் உயிரிழப்பும் அதிகமாக உள்ளது.

இத்தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் குடும்பத்தினர், உறவினர்கள் கூட நெருங்க அச்சப்பட்டு இறுதிச்சடங்கு செய்ய இயலாத சூழல் நேருக்கிறது.

கரோனா மரணங்கள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் உயர்ந்த உள்ளம் கொண்ட சிலர் அந்த உடல்களை எவ்வித சலனமும் இல்லாமல் மின் மாயணங்களுக்குப் பாதுகாப்பாக எடுத்துச்சென்று மனிதநேயத்துடன் கையாண்டு, நல்லடக்கம் செய்யும் புணிதப் பணியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா-என்ற அமைப்பின் தன்னார்வலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கரோனா மரண உடல்கள் நல்லடக்கம் மட்டுமின்றி ஊரடங்கின்போது, ஏழைகளுக்கு உதவுதல், கரோனா தடுப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

தொற்று பாதிக்கும் நபர்களுக்கு உதவும் வகையில் சில பகுதியில் சிறப்புக் கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்தியும் பணி செய்தல், ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் ஏற்பாடு செய்தல் போன்ற பிற பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தியுள்ளனர்.

மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் முதல், இரண்டாவது அலை தொற்று தாக்கி உயிரிழந்த சுமார் 600க்கும் மேற்பட்டோரின் உடல்களை மயானம் குடும்பத்தினர் விரும்பிய இடங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பு நடைமுறை பின்பற்றி நல்லடக்கம் செய்திருப்பதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பீர் முகமது தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், கரோனா தொற்று இந்தியா முழுவதும் பல்வேறு பாதிப்பு, இழப்புகளை ஏற்படுத்துகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், தேசம் முழுவதும் மக்களைக் காக்கும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அவசர ஊர்தி சேவை, தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடல்களை நல்லடக்கம் செய்வது எனப் பல்வேறு மருத்துவச் சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.

சென்னை, திருச்சி, தென்மாவட்டங்கள் என, தமிழகளவில் கரோனாவின் இரண்டாவது அலையில் மட்டும் மே 18ம் தேதி வரை 387 உடல்கள் அடக்கம் செய்துள்ளோம். மதுரையில் மட்டுமே சுமார் 48 உடல்களை நல்லடக்கம் செய்திருக்கிறோம்.

இது தவிர, தொற்று பாதித்த 21 பேருக்கு ஆக்சிஜன் ஏற்பாடு, 32 நபர்களுக்கு படுக்கை வசதி, 35 நபர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்துள்ளோம். சென்னை, கோவையில் சொந்தச் செலவில் கரோனா கேர் மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல் அலையில் தமிழகத்தில் மட்டும் 240க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். முதல் அலையில் இந்தியா முழுவதும் 1,517 உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறையின்படி, 10 அடி ஆழத்தில் குழி, உடலை சுற்றிலும் உப்பு போடுதல் போன்ற விதியைப் பின்பற்றி அடக்கம் செய்கிறோம்.

உடல்கள் அவரவர் சமூக சடங்கு முறைகளுடன் விரும்பிய இடங்களில் அடக்கம் செய்யப்படுகிறது. இப்பணியில் ஈடுபடும் தங்களது தன்னார்வலர்கள் கவச உடைகளுடன் ஈடுபட்டாலும் பிற பணிகளுக்குச் செல்ல மாட்டார்கள்.ஒரு வாரத்தில் தனிமைப்படுத்திக் கொள்வர். இது போன்ற அனைத்துச் சேவைகளை முற்றிலும் இலவசமாக செய்கிறோம், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x