Published : 19 May 2021 07:33 PM
Last Updated : 19 May 2021 07:33 PM

கரோனா பலி; அடக்கம் செய்வதில் குறைகள் இருந்தால் வாட்ஸ் அப்பில் புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

ககன்தீப் சிங் பேடி: கோப்புப்படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மயான பூமிகளில் இறந்தவர்களைப் புதைத்தல், தகனம் செய்தலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அது தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் மூலமாகவும், போனிலும் தெரிவிக்கலாம் என, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 19) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சி, கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மற்றும் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா வைரஸ் தொற்று மேலாண்மையின் ஒரு பகுதியாக, கரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களை மிகவும் கண்ணியமாக அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி கவனத்துடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மயானங்களிலும் இறந்தவர்களின் உடலை தகனம் அல்லது புதைத்தல் ஆகிய முறைகளில் நல்லடக்கம் செய்யும் பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 199 இடங்களில் மயான பூமிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 37 இடங்களில் 41 எரிவாயு மற்றும் மின்தகன மேடைகள் இயங்கி வருகின்றன. மேலும், இறந்தவர்களின் உடலை மருத்துவமனையிலிருந்து மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அரசின் சார்பில் இலவச அமரர் ஊர்தி சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச அமரர் ஊர்தி சேவையைப் பெற 155377 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாநகராட்சிக்கு உட்பட்ட மயானங்கள் நேரடியாக வீடியோ மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மயானங்களில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், இது குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மயான பூமிகள் மற்றும் அங்குள்ள தகன மேடைகளின் செயல்பாடுகள் தலைமைப் பொறியாளர் (பொது) மேற்பார்வையில் நாள்தோறும் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான பராமரிப்புப் பணிகள் குறித்து திட்டமிடுதல், எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மருத்துவமனைகளிலிருந்து அமரர் ஊர்தியில் இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்லவோ அல்லது மயானங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கோ யாரேனும் பணம் கேட்டாலோ, மயானங்களில் சேவைக் குறைபாடு இருந்தாலோ அதுகுறித்த புகார்களைப் பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் 044-2538 4520 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், இது தொடர்பான புகார்கள் குறித்த தகவல்கள் மற்றும் வீடியோ பதிவுகளை 94983 46900 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x