Published : 19 May 2021 07:28 PM
Last Updated : 19 May 2021 07:28 PM

ஆரணியில் கரோனா நோயாளிகளுக்கு கூடாரத்தில் தங்கவைத்து சிகிச்சை: தனியார் கிளினிக்குக்கு சீல்

ஆரணியில் அரசின் அனுமதி பெறாமல் கரோனா நோயாளிகளுக்குத் தற்காலிக கூடாரத்தில் தங்கவைத்து சிகிச்சை அளித்த தனியார் கிளினிக்குக்கு சீல் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் பழைய பேருந்து நிலையம் எதிரில், தனியார் கிளினிக் இயங்கி வருகின்றது. இங்கு அரசின் முறையான அனுமதி எதுவும் பெறாமல், மருத்துவர் சிவரஞ்சனி, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். மேலும், அந்த தனியார் கிளினிக்கில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. கிளினிக்கின் எதிரில் உள்ள காலி இடத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து, கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குப் படுக்கை அமைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

ஆரணி நகரைச் சுற்றியுள்ள பகுதியில், கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆரணி அரசு மருத்துவமனை, ஆரணி அருகேயுள்ள தச்சூர் பொறியியல் கல்லூரியில் செயல்படும் கரோனா சிகிச்சை வார்டிலும் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுக்கை வசதிகள் இல்லாததால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய மருத்துவர் சிவரஞ்சனி, கிளினிக்கில் 10க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அரசின் முறையான அனுமதி இல்லாமல் இயங்கிவரும் கிளினிக் குறித்து, மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கண்ணகி தலைமையிலான குழுவினர், காவல்துறை பாதுகாப்புடன் இன்று (மே 19) சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குள்ள தற்காலிக கூடாரத்தில் சுமார் 20 படுக்கை வசதிகளையும் மற்றொரு கிடங்கு பகுதியில் 10க்கும் மேற்பட்ட படுக்கைகளையும் தயார் செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அரசின் உரிய அனுமதி பெறாமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறி அந்த கிளினிக்குக்கு சீல் வைக்கப்பட்டது.

இது தொடர்பாக இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) கண்ணகி செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்குப் போதுமான வசதிகள் உள்ளன. ஆனால், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கிய இந்த கிளினிக்கில் எந்த படுக்கை வசதியும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த சில நாட்களாக மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநரிடமும், அரசிடமும் எந்த முன் அனுமதியும் பெறாமல், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது.

அதன்பேரில், இங்கு ஆய்வு செய்ததில் 11 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதில், மூன்று பேருக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் 2 பேரை செய்யாறுக்கும், ஒருவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளோம். மற்றவர்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x