கரோனா பணிக்காக வெளியூர்ப் பயணம்; என்னைச் சந்திக்க முயல வேண்டாம்; வரவேற்பைத் தவிருங்கள்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

தன் வெளியூர்ப் பயணத்தின்போது, திமுகவினர் தன்னைச் சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது என, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 19) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா பெருந்தொற்றுத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை, நாளை (20.5.2021) மற்றும் நாளை மறுநாள் (21.5.2021) சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்கிறேன்.

இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால், திமுக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன்.

எனவே, திமுக உடன்பிறப்புகள் நான் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, 'ஒன்றிணைவோம் வா' பணிகளில் ஈடுபட்டு மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், இந்தப் பயணத்தின்போது அல்லது நான் தங்கும் இடங்களில் என்னைச் சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், எனக்கு வரவேற்பு கொடுக்கும் எண்ணத்தில் பயணம் செய்யும் பகுதிகளில் திமுக கொடிகளைக் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

திமுக உடன்பிறப்புகளான உங்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் ஊக்கத்தைத் தரும் என்றாலும், இந்தத் தருணத்தில் உங்கள் நலனும், பொதுமக்கள் அனைவரின் நலனும் எனக்கு மிகவும் முக்கியம் என்பதால் என்னுடைய இந்த அன்பு வேண்டுகோளை திமுகவினர் தவறாது கடைப்பிடித்திட வேண்டுகிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in