கரோனா ஊரடங்கால் அழியும் மல்லிகை தோட்டங்கள்; சந்தைக்கு வெறும் 1 1/2 டன் பூ மட்டுமே வருகை: பறிப்புக் கூலிக்கு கூட விலை கிடைக்காத பரிதாபம்

கரோனா ஊரடங்கால் அழியும் மல்லிகை தோட்டங்கள்; சந்தைக்கு வெறும் 1 1/2 டன் பூ மட்டுமே வருகை: பறிப்புக் கூலிக்கு கூட விலை கிடைக்காத பரிதாபம்
Updated on
2 min read

கரோனாவால் அனைத்துவகை பூக்கள் விலையும் வீழ்ச்சியடைந்த நிலையில் விவசாயிகள் பூக்களைப் பறிக்க ஆர்வம் காட்டாததால் இன்று மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வெறும் 1 1/2 டன் மதுரை மல்லிகை பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

மனமும், தலையில் சூடுவதற்கும் அழகாவும் இருக்கும் ரோஜாவுக்கும், மதுரை மல்லிகைக்கும் எப்போதுமே உள்ளூர் சந்தை முதல் உலக சந்தை சந்தை வரை வரவேற்பு உண்டு.

பெண்கள் தலையில் சூடுவதை தவிர்த்து ரோஜா பூக்கள் பூங்கொத்து தயாரிக்கவும், மதுரை மல்லிகை நறுமனப்பொருட்கள் தயாரிக்கவும், பூஜைகளுக்கும் அதிகம் பயன்படுகிறது.

அதனால், முக்கிய முகூர்த்த நாட்களில் வியாபாரிகள் நிர்ணயிப்பதே இந்தப் பூக்களுடைய விலையாக இருக்கும். இந்த இரண்டு பூக்களின் செடிகளின் பராமரிப்பும் அதிகம். தண்ணீரும் அதிகம் பாசனம் செய்ய வேண்டிய இருக்கும். அதனால், இந்தப் பூக்கள் விலை சாதாரண நாட்களிலேயே கூடுதலாக விற்கும்.

இதில், மதுரை மல்லிகை சாதாரண நாட்களில் கிலோ ரூ.1000 முதல் ரூ.1,500 வரையும், முகூர்த்த நாட்களில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்கும். மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு ஒரு நாளைக்கு 50 முதல் 80 டன் வரை மதுரை மல்லிகை வந்து கொண்டிருக்கும்.

அங்கிருந்து உள்ளூர் வியாபாரிகளுக்கும், வெளிநாட்டு நறுமனப்பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனாவால் மதுரை மல்லிகை விற்பனை முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. கோவில்கள் மூடப்பட்டதோடு முகூர்த்த நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காததால் மதுரை மல்லிகை பூக்கள் தேவையும் இல்லை.

அதனால், சந்தைகளில் கொண்டு வந்த மதுரை மல்லிகைப்பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் குப்பை தொட்டியில் கொட்டி சென்ற அவலம் நடந்தது. அதனால், கடந்த ஆண்டு 40 சதவீதம் மல்லிகை தோட்டங்கள் பராமரிப்பு இல்லாமல் அழிந்துபோய்விட்டது.

மீதமுள்ள மல்லிகைத் தோட்டங்களில் இருந்தே சந்தைகளுக்கு மதுரை மல்லிகைப் பூக்கள் வந்து கொண்டிருந்தது. அதுவும் கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்து கடந்த நவம்பர் மாதம் முதலே ஒரளவு மதுரை மல்லிகைப் பூக்கள் 20 டன் முதல் 40 டன் வரை வரத்தொடங்கியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவும் நிலையில் ஊரடங்கு போடப்பட்டதால் விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு மதுரை மல்லிகைப்பூக்களை பறித்து மதுரை மாட்டுத்தவாணி சந்தைகக்கு கொண்டு வருகின்றனர்.

ஆனால், பூக்கள் விலை கடந்த வாரம் கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரைதான் சென்றது. பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுக்கு கூட வருமானம் இல்லாமல் விவசாயிகள் பூக்களை இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போல் குப்பை தொட்டியில் கொட்டி சென்ற பரிதாபம் அரங்கேறியது.

அதனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மதுரை மல்லிகை பூக்களை செடிகளில் இருந்து பறிப்பதை கைவிட்டனர். ஒரு சில விவசாயிகளே தற்போது சந்தைகளுக்கு பூக்களை கொண்டு வந்தனர்.

அதனால், மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்தது. மதுரை மல்லிகை இன்று வெறும் ஒன்றரை டன் மட்டுமே வந்தது. அதனால், ஒரளவு விலை கூட கிலோ ரூ.300க்கு விற்றது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி மலர்ச் சந்தை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘பட்டன் ரோஸ் கிலோ ரூ.40 சம்பங்கி ரூ.20 விற்றது. மற்றபூக்கள் விலை விலையை வெளிப்படையாக சொல்லமுடியாத அளவிற்கு விலை குறைந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை வாங்க வரவில்லை. விவசாயிகளுக்கு வருமானம் இ்லலாமல் அவர்கள் செடிகளை பராமரிப்பையும், பூக்கள் பறிப்பையும் நிறுத்திவிட்டனர். அதனால், பூக்கள் வரத்தும் அதன் விலையும் குறைந்தது, ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in