

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 12 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 2, 833 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான மருத்துவக் கருவிகள், மருந்துகள் வழங்கப்படுவதால் அந்தந்த மாநில மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பெரும் உதவியாக இருக்கிறது.
ஆனால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டுமானப்பணி தொடங்கப்படாமல் கேள்விக்குறியாக நிற்கிறது.
நாட்டில் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கும், மருத்துவத்தை மேம்படுத்துவதற்கும் பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (பிஎம்எஸ்எஸ்ஒய்) திட்டம் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்கனவே முழுமையாக செயல்பட்டு வருகின்றன.
மேலும், 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளில், புறநோயாளிகள் பிரிவு, மற்றும் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஐந்து எய்ம்ஸ்களில் எம்பிபிஎஸ் வகுப்புகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்தப் பன்னிரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் என் -95 முகமூடிகள், தனிமனித பாதுகாப்புக் கருவிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் ஃபாவிபிராவிர், ரெம்டெசிவிர் மற்றும் டோசிலிசுமாப் ஆகியவை இந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வழங்கப்படுகின்றன.
கடந்த இரண்டரை மாதங்களில் ராய்ப்பூர் எய்ம்ஸில் மட்டும் 9,664 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2015ஆம் ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2018 இல் மதுரை தோப்பூரில் அமைக்க இடம் தேர்வு செய்து 2019 ஜனவரி 27 இல் அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது.
கடந்த 2021 மார்ச் 26 இல் ஜப்பானின் ஜைகா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுளளது. தற்போது டெண்டரின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், ‘‘மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளதால், இனியும் தாமதிக்காமல் 750 படுக்கையுடன் கூடிய உள்நோயாளிகள் பிரிவு கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். வரும் காலங்களில் எதிர்நோக்கியுள்ள மருத்துவத் தேவைகளை சமாளிக்க இந்த மதுரை எய்ம்ஸ் தென் மாவட்ட மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். கரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் 1000 படுக்கைகள் கொண்ட தற்காலிக கட்டிடங்களை உடனடியாக அமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.