

காக்னிஸன்ட் அறக்கட்டளை - சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து, விஹெச்எஸ் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் இன்று (மே 19) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிஸன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் பிரிவாக காக்னிஸன்ட் அறக்கட்டளை விளங்குகிறது. இப்பிரிவு, சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்துடன் (ஆர்சிஎம்இ) இணைந்து, சென்னையில் 40 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா (கோவிட் - 19) சிகிச்சைப் பிரிவை விஹெச்எஸ் மருத்துவமனையில் உருவாக்கியுள்ளது.
இந்தப் படுக்கை வசதி பிரிவானது விஹெச்எஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் மே 15, 2021 அன்று ஆர்சிஎம்இ தலைவர் எம்.சீனிவாச ராவ், விஹெச்எஸ் மருத்துவமனை கவுரவச் செயலாளர் எஸ். சுரேஷ், விஹெச்எஸ் மருத்துவமனை தலைமைச் செயல்பாட்டு அதிகாரி யுவராஜ் குப்தா ஆகியோரது முன்னிலையில் ஒப்படைக்கப்ட்டது.
இப்புதிய பிரிவானது ரூ.1.1 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. கரோனா நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை உடையதாக இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
40 படுக்கை வசதிகள் கொண்ட இப்பிரிவானது 'காக்னிஸன்ட் சி- 3' எனப்படுகிறது. இந்தியாவில் தற்போது தீவிரமாகப் பரவிவரும் கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தைக் குறைக்கவும், நோயாளிகளுக்கு உதவும் வகையிலும் இப்பிரிவை காக்னிஸன்ட் அறக்கட்டளை உருவாக்கியுள்ளது''.
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
'விஹெச்எஸ் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கோவிட் - 19 வசதியானது, நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், உடனடி சிகிச்சை அவசியமாகத் தேவைப்படுவோருக்கும், நகர்ப்பகுதியில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது' என்று காக்னிஸன்ட் அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரி ராஜஸ்ரீ நடராஜன் தெரிவித்தார்.
இப்பிரிவை உருவாக்க ஒத்துழைப்பு நல்கிய மாநில அரசு, மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் விஹெச்எஸ் மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அறக்கட்டளையுடன் கைகோத்துச் செயல்பட்ட ஆர்சிஎம்இ அமைப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
'கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருவதால், மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. குறிப்பாக, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் தேவைப்படுகிறது. அந்த வகையில், இத்தகைய கட்டமைப்பை உருவாக்க காக்னிஸன்ட் அறக்கட்டளை முன்வந்து தேவையான உதவிகளைச் செய்துள்ளது. இது ஓரளவுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும். விஹெச்எஸ் மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை மையம் பலரது உயிரைக் காக்க உதவியாக இருக்கும்' என்று நம்புவதாக, ஆர்சிஎம்இ தலைவர் சீனிவாச ராவ் தெரிவித்தார்.