Last Updated : 19 May, 2021 02:29 PM

 

Published : 19 May 2021 02:29 PM
Last Updated : 19 May 2021 02:29 PM

கமலின் சர்வாதிகாரமே மநீம தோல்விக்குக் காரணம்: கட்சியிலிருந்து விலகிய பொதுச் செயலாளர் முருகானந்தம் விமர்சனம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டவருமான எம்.முருகானந்தம், இன்று கட்சியில் இருந்து விலகினார்.

அதைத் தொடர்ந்து திருச்சியில் இன்று எம்.முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மக்கள் நீதி மய்யத்தில் ஜனநாயகம் அற்றுப் போய்விட்டது. சர்வாதிகாரம் தலை தூக்கிவிட்டது. தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுக் கவுரவம் பெற வேண்டிய நிலையில், யாருடனும் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி வைத்ததும், 100க்கும் அதிகமான தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுமே தேர்தல் தோல்விக்கு முழுக் காரணம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு வங்கி 3.4 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. ஆனால், தேர்தலில் அது 2.4 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதற்குக் கட்சித் தலைமைதான் காரணம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர்தான் முதலில் அணுகினார். ஆனால், பின்னர் திமுகவுக்குத் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்தார். இதனால், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவியதாகக் கூற முடியாது. ஆனால், கமலுக்கென தனித் திட்டம் இருந்திருக்கும். இல்லையெனில், பிரசாந்த் கிஷோரை இழந்திருக்க மாட்டார்.

எம்.முருகானந்தம்

தலைமைத்துவ அடிப்படையில் நல்ல முடிவை எடுத்திருந்தால், கமல் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பார். அல்லது பலமான கட்சியுடன் கூட்டணி வைத்து 18 முதல் 20 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் அனுப்பியிருப்பார்.

தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தாலே சரியான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறலாம். ஆனால், தேர்தலில் பலத்த தோல்வி அடைந்த நிலையில், அதற்காக பொறுப்பைத் தான் ஏற்காமல், நிர்வாகிகளை மட்டும் ராஜினாமா செய்யுமாறு கூறுவது தலைவருக்கான பொறுப்பாக இல்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சரியான பாதையில் அவர் அழைத்துச் செல்லவில்லை. தன்னிச்சையாக அவர் எடுத்த முடிவுகள் பலரையும் வருத்தமடையச் செய்தன. கட்சி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கமல்ஹாசன் முழுமையாகத் தடுத்துவிட்டார் என்பதுதான் உண்மை. கமல்ஹாசன் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

கொள்கை வேறு, தேர்தல் கூட்டணி வேறு என்ற தெளிவு இருந்திருந்தால் கட்சியை வளர்த்திருக்க முடியும். ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்வதற்கான வாய்ப்பு இல்லை. கட்சியின் தேர்தல் தோல்விக்குக் கமல்ஹாசன்தான் பொறுப்பேற்க வேண்டும். நான் பணியாற்ற இதுவரை வாய்ப்பளித்த கமல்ஹாசனுக்கு நன்றி''.

இவ்வாறு முருகானந்தம் பேசினார்.

முன்னதாகக் கமல்ஹாசனுக்கு, தான் எழுதிய 6 பக்கக் கடிதத்தை முருகானந்தம் வாசித்துக் காட்டினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். முதலில் கட்சியில் இருந்து, அதன் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் விலகினார். அதைத் தொடர்ந்து சந்தோஷ் பாபு ஐஏஎஸ், பத்மப்ரியா ஆகியோர் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகிய நிலையில், தற்போது முருகானந்தமும் வெளியேறி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x