Published : 19 May 2021 01:43 PM
Last Updated : 19 May 2021 01:43 PM

30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா.வின் உடல் தகனம்

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏராகத் திகழ்ந்த மறைந்த கி.ரா.வின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

எழுத்துலகின் பேராசான், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயோதிகம் காரணமாக 99-வது வயதில் திங்கள்கிழமை நள்ளிரவு புதுச்சேரியில் காலமானார்.

''கி.ரா.வின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். அவர் கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை, மாணவர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும். கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும்'' எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், கி.ரா.வின் உடல் நேற்றிரவு 9 மணிக்குப் புதுச்சேரியிலிருந்து கோவில்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவலுக்குக்குக் கொண்டு வரப்பட்டது. நேற்றிரவு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏ., கீதா ஜீவன், ஆட்சியர் செந்தில் ராஜூ ஆகியோர் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, இன்று கி.ராவின் வீட்டிலிருந்து அவரது உடல் உறவினர்கள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் சூழ ஊர்வலமாக அவருக்குச் சொந்தமான நிலத்துக்குக் கொண்டு வரப்பட்டது. மகன்கள் பிராபகர், திவாகர் ஆகியோர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

அங்கு, கனிமொழி எம்.பி., சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், சாத்தூர் எம்.எல்.ஏ. மருத்துவர் ரகுராமன், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மதுரை மக்களவை எம்.பி., சு.வெங்கடேசனும் வந்திருந்தார்.

இறுதிச்சடங்குகள் மற்றும் அஞ்சலி முடிந்தபின்னர் ஆயுதப்படை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார் மூன்று சுற்றுகளாக 30 குண்டுகளை வானத்தை நோக்கி சுட்டு அரசு மரியாதை செய்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்.

பின்னர் கி.ரா.வின் உடல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x