

முகக்கவசத்தின் அவசியம், அதை எப்படி அணிவது, கிருமி நாசினி பயன்பாடு, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலமாக பிரச்சாரம் செய்துள்ளார்.
காணொலியில் முதல்வர் ஸ்டாலின் நிகழ்த்திய பிரச்சார உரை:
“நான் நிற்கும் இடத்தில் யாரும் இல்லாததால் என் முகக்கவசத்தை எடுத்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன்.
இது கரோனா என்கிற பெருந்தொற்றுக் காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடனுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் சென்றால் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.
இந்தத் தொற்றிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க மிக மிக முக்கியமானது இந்த முகக்கவசம்தான். முகக்கவசம்தான் மனிதர்களுக்கு உயிர்க் கவசமாக மாறியுள்ளது. இந்த முகக்கவசத்தை அனைவரும் போட்டுக் கொள்ளுங்கள். இது மிக முக்கியம். இந்த முகக்கவசத்தை முழுமையாகப் போட வேண்டும். மூக்கு, வாய் இரண்டையும் முழுமையாக மூடி இருப்பதுபோல் போட வேண்டும்.
சிலர் இதனை பாதி அளவுதான் போடுகிறார்கள். மூக்குக்குக் கீழே போடுகிறார்கள். இதனால் எந்தப் பயனும் இல்லை. சிலர் ஹெல்மெட் வாங்கி பைக்கில் மாட்டிக்கொண்டு செல்வார்கள், தலையில் போடாமல் செல்வார்கள். அதுபோல் தாடைக்கு முகக்கவசம் மாட்டிக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. முழுமையாக மூக்கு, வாயை மூட வேண்டும்.
அதேபோல் மருத்துவர்கள் இன்னொன்றைச் சொல்கிறார்கள். மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது இரண்டு முகக் கவசங்களைச் சேர்த்து அணிய வேண்டும் என்று சொல்கிறார்கள். பேருந்துகளில் பயணிக்கும்போது, மருத்துவமனைகளுக்குச் செல்லும் போது, தொழிற்சாலை, அலுவலகங்களில் பணி செய்யும்போது, கடைகளுக்குச் செல்லும்போது இரண்டு முகக்கவசம் அணிவது நல்லது என்று சொல்கிறார்கள்.
கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துங்கள். அதை முழுமையாக எடுத்து விரல் இடுக்கு வரை முழுமையாகத் துடைக்க வேண்டும். இவை அனைத்தையும்விட மிக மிக முக்கியமானது தடுப்பூசி. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காக்கவும், உயிரிழப்பிலிருந்து தடுக்கவும் தடுப்பூசி மிகச்சிறந்த கவசம்.
நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன், இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டேன். சிலருக்குக் காய்ச்சல், உடல் வலி வரலாம். அதுவும் ஒரே நாளில் சரியாகிவிடும். அதனால் எந்தத் தயக்கமும் தேவை இல்லை. தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாகவே தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தடுப்பூசி போடுவது, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது ஆகிய மூன்றின் மூலம் கரோனா தொற்றிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காத்திடலாம். வரும் முன் காப்போம், கரோனா தொற்றிலிருந்து நம்மையும், நம் மக்களையும் காப்போம். நன்றி”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.