Published : 19 May 2021 11:30 AM
Last Updated : 19 May 2021 11:30 AM

தொழில் துறையினர் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

''அரசின் முயற்சிகளில் ஏதேனும் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும், தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் முன்னெடுப்புகளில் இதற்கு முன்னுரிமை கொடுப்பது சிறப்பாக இருக்கும், ஏதேனும் ஒரு வகையில் அரசின் முயற்சியில் பங்கேற்று உதவ வேண்டும்'' எனத் தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னையில் தொழில் நிறுவனங்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

“இக்கட்டான இக்காலகட்டத்தில் நீங்களும் உங்கள் தொழிலாளர்களும், குடும்பத்தாரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையானது நமது மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்பதை அறிவோம்.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து போர்க்கால அடிப்படையில் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராது இப்பணியில் முழு முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஊரடங்கு; எனினும் ஊரடங்கு என்பது ஒரு தீர்வு அல்ல, ஏனென்றால், அது பலரது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும், தொழிலையும் பாதித்துவிடும்.

எனவேதான், தொடர் உற்பத்தி நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் விநியோகிப்பாளர்கள், ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இயங்க அனுமதித்துள்ளோம்.

இத்தகைய நிறுவனங்கள் எவ்வித சிரமுமின்றி இயங்க ஏதுவாக அவற்றின் தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் பணிக்குச் சென்றுவர இ-பதிவு முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்.

உங்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் களைவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய Toa Helpline சேவையும் தொழில் வழிகாட்டி மையத்தில் (Guidance Bureau) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதென்பதை அறிந்து மகிழ்கிறேன்.

தொழிற்சாலைகளை இயக்கும் அதே நேரத்தில், உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதும் மிகவும் முக்கியமான கடமையாகும் என்று தெரிவிக்க விரும்புகிறேன். இந்தக் கொரோனா பெருந்தொற்றானது மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு மீது ஒரு பெரும் அழுத்தத்தை உண்டாக்கி உள்ளது.

இருப்பினும், நம் மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் அனைத்து முன்களப் பணியாளர்களும் இதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் போன்றவற்றின் தேவை பலமடங்கு உயர்ந்திருக்கின்றன. அவற்றைப் பெற்று விநியோகம் செய்வதில் இந்த அரசு தீவிர அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் சிப்காட் மூலம் சுமார் 7,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டுள்ளன. சிப்காட் நிறுவனம் இதுவரை 500 சிலிண்டர்களை சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்துள்ளது. மேலும் 1,650 சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து கப்பல் மூலம் வர உள்ளன.

சிஐஏ, சாம்சங் நிறுவனம் மூலம் 500 சிலிண்டர்கள் நம் மாநிலத்திற்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் தொழில் நிறுவனத்தின் மூலம் 13 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து 142 மினி ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகிறது.

தமிழ்நாடு அரசு தற்போதைய பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதுதவிர 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. சிக்கலான இக்காலகட்டத்தில் அரசோடு தோள்கொடுத்து நிற்கும் தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நோய்த் தொற்றிலிருந்து மக்கள் மீண்டெழ உங்கள் பங்களிப்பை வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அரசின் முயற்சிகளில் ஏதேனும் ஒன்றில் உங்களின் பங்களிப்பைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சிஎஸ்ஆர் முன்னெடுப்புகளில் இதற்கு முன்னுரிமை கொடுப்பது சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

குறிப்பாக ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் ஃப்லோ மீட்டர்கள், கிரியோஜெனிக் டெண்ட்ரஸ் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இவை தவிர முதல்வர் பொது நிவாரண நிதிக்கும் தாராளமாக நிதி வழங்க நான் கேட்டுக்கொள்கிறேன். தற்போது முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நிதி முழுவதையும் கரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்படுகிறது.

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், என்.என்.எம்.எஸ்.சி, சிப்காட், பெருநகர மாநகராட்சி ஆகியவை மேற்கொள்ளும் கொள்முதலுக்காக நீங்கள் நேரடியாக அந்தந்த விற்பனையாளர்களுக்கு நீங்கள் செலுத்தலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது ஒவ்வொருவர் பங்களிப்பும் பல உயிர்களைக் காக்கவும், இந்த நோயிலிருந்து மக்களைக் காக்கவும் பேருதவியாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி, உங்களின் பங்களிப்புக்கு முன்னதாக நான் நன்றி செலுத்துகிறேன்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x