

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு, அந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர் மருந்து வழங்குவதற்கான தமிழக அரசின் இணையதளம் செயல்படத் தொடங்கியது.
கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து கொடுக்கப்படுகிறது. தொற்று 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால், பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ரெம்டெசிவிர் மருந்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதை தடுக்கதமிழ்நாடு மருத்துவப் பணிகள்கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்தமாதம் 26-ம் தேதி தொடங்கப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகரித்ததால், சிலநாட்களில் மருந்து விற்பனை அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகளின் உறவினர்கள் குவிந்ததால் மருந்து வாங்க 2 நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலியிலும் மருந்து விற்பனை தொடங்கப்பட்டது.
ஆனாலும் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரியில் கூட்டம்குறையாததால், மருந்து விற்பனைகடந்த 16-ம் தேதி சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. ஒரு நாளுக்கு 300பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் மருந்து வாங்க குவிந்தனர்.
இதேபோல மதுரை, திருச்சி,கோவை, சேலம், திருநெல்வேலியிலும் மருந்து வாங்க மக்கள் அதிகஅளவில் குவிந்தனர். மருந்து விற்பனை செய்யும் இடங்களில் கரோனா பரவல் அபாயம் இருப்பதாகவும், மருந்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் அரசை வலியுறுத்தினர்.
இதையடுத்து, சென்னை உட்பட 6 நகரங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை தமிழக அரசுநிறுத்தியது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை அந்தந்த மருத்துவமனைகள் மூலமாகவே வழங்கலாம் என முடிவெடுத்தது.
அதன்படி, ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் தொடங்கப்பட்ட https://tnmsc.tn.gov.in/ என்ற இணையதளம் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தங்களது மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து,தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம். அரசிடம் இருந்து வாங்கும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அளிக்க வேண்டும்.
இதேபோல, ஆக்ஸிஜன் தேவைக்கும் இந்த இணையதளத்தை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.பொதுமக்கள், இதன்மூலம் படுக்கைகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.