

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடியை, தலைமைச் செயலரிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக அதிமுக சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியும், அதிமுகநாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாதஊதியமும் வழங்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ரூ.1 கோடிக்கான காசோலையை, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடிபிரபாகர், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் நா.பாலகங்கா ஆகியோர் தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்புவிடம் நேற்று வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஜெயக்குமார் கூறியபோது, ‘‘ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் கரோனா தடுப்பு பணிகளில் எங்கள் பங்களிப்பு இருக்கும்.எம்எல்ஏக்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது மிகவும் நல்ல விஷயம்’’ என்றார்.