Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

புதிய குடும்ப அட்டை வழங்க பொதுமக்களிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம்: உணவுத் துறை அமைச்சர் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில் பொதுமக்களுக்கு புதிய குடும்ப அட்டைவழங்க தலா ரூ.500 லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியரால் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

குஜிலியம்பாறை தாலுகா வறண்ட பகுதி. இப்பகுதியில் கூலித் தொழிலாளர்களே அதிகம்வசிக்கின்றனர். இவர்களில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)இல்லாத பலர் புதிதாக விண்ணப்பித்திருந்தனர். தகுதியின் அடிப்படையில் விசாரித்து இவர்களுக்கான புதிய குடும்ப அட்டை வழங்க தயார்நிலையில் இருந்தது.

இதை வாங்குவதற்கு வந்த பொதுமக்களிடம் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.500 லஞ்சமாக வழங்கவேண்டும் எனக் கூறி பணத்தை குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்திருந்தோரை, செல்போனில் அழைத்து, குடும்ப அட்டை வாங்கிக் கொள்ள வருமாறு அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் தொழிலாளி ஒருவர் குடும்ப அட்டை வாங்க வந்தபோது அவரிடம் ரூ.500 தருமாறு சரவணன் கேட்டதாக தெரிகிறது. இதற்கு ‘‘தன்னிடம் ரூ.200-தான் உள்ளது. கூலி வேலைக்குப் போனால்தான் வருமானம். இதற்குமேல் இல்லை” என்று கூறவே, ‘‘அப்படியென்றால் நாளை பணத்துடன் வந்து புதிய குடும்ப அட்டையை வாங்கிச் செல்லுங்கள்” என வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பாலுபாரதி, குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் சென்று, ‘‘உழைத்துச் சாப்பிடும்மக்களிடம் எதற்காக லஞ்சம்வாங்குகிறீர்கள். உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கவில்லையா? சொல்லுங்கள் அரசிடம் கேட்டு வாங்கித் தருகிறோம்” என்று கடிந்து பேசியுள்ளார்.

இதற்குப் பதில் அளித்த வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், ‘‘குடும்ப அட்டை வாங்க வருவோர் அவர்களாகக் கொடுத்தால் வாங்கிக்கொள்கிறோம், கட்டாயப்படுத்தி யாரிடமும் கேட்பதில்லை” என்றார். இருவருக்கும் இடையிலான நீண்ட நேர உரையாடல் கொண்ட வீடியோ வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இதுகுறித்து பாலுபாரதி ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

குஜிலியம்பாறை தாலுகா பகுதியில். கூலித்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். புதிதாக விண்ணப்பித்தவர்கள் 300 பேருக்கு குடும்ப அட்டைகள் வந்துள்ளன. இதுவரை 30 பேருக்கு புதிய குடும்ப அட்டை ரூ.500 வீதம் பெற்றுக்கொண்டு வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் வழங்கியுள்ளார்.

இதையறிந்து வட்ட அலுவலகம் சென்று கேட்டேன். ரூ.500 என்பது கூலித் தொழிலாளிகளின் 3 நாள் வருமானம். அவர்களிடம் எப்படி பணம் வாங்க இந்த அலுவலருக்கு மனம் வந்ததோ, தெரியவில்லை, இவர் சம்பளம் வாங்கவில்லையா? என்றார்.

அமைச்சர் உறுதி

இதுகுறித்து உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியதாவது:

புதிய குடும்ப அட்டை வழங்கமக்களிடம் ரூ.500 லஞ்சம் வாங்குவதாக வந்த புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்ககூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவுத் துறை அமைச்சரான நானும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டோம். இதையடுத்து வட்டவழங்கல் அலுவலர் சரவணனை பணியிடை நீக்கம் செய்துதிண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற எத்தகைய முறைகேடுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பொறுத்துக் கொள்ளாது. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் கருத்துக் கேட்க முயன்றபோது அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. முக்கியமான கூட்டத்தில் இருப்பதாக அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x