

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக தொற்றாளர்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். ஊத்துக்குளி, குன்னத்தூர், முத்தூர் பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்ற ஆதங்கமும் அப்பகுதி மக்களிடம் நிலவுகிறது.
இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிலர் ‘இந்து தமிழ் திசை'செய்தியாளரிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் இரண்டு உட்பட 29 ஆம்புலன்ஸ்கள் (108 ஆம்புலன்ஸ்கள்) உள்ளன. இதில் 5 ஆம்புலன்ஸ்கள் கரோனா தொற்றாளர்களுக்கு மட்டும் பயன்படுகின்றன.
தற்போது பேரிடர் என்பதால்பாதிக்கு, பாதி வாகனங்களை கரோனா தொற்றாளர்களை அழைத்து வர பயன்படுத்த வேண்டும். மாறாக,இந்த 5 வாகனங்களும் மாவட்டத்தின் ஒவ்வொரு திசையில் இருந்து தொற்றாளர்களை அழைத்துக்கொண்டு, அரசு மருத்துவமனைகளுக்கு செல்கிறது. கரோனாவுக்கு பயன்படுத்தினால் முறையாக கிருமிநாசினி தெளித்துதான் அடுத்த முறை பயன்படுத்த வேண்டும்.
லாபம் ஈட்டும் தனியார்
திருப்பூர் குமார் நகர், சேவூர், காங்கயம் - ஊதியூர் சாலை குள்ளம்பாளையம், மடத்துக்குளம், உடுமலை பேட்டை ஆகிய 5 இடங்களில் கரோனா தொற்றாளர்களை அழைத்துசெல்ல ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒருவரை அழைத்துச் சென்றுவிட்டு, அதன்பின் மீண்டும் அடுத்த தொற்றாளரை வாகனத்தில் ஏற்ற குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆகும். ஏனென்றால், தற்போது நோயாளிக்கு படுக்கை வசதி கிடைக்கும் வரை, ஆம்புலன்ஸும் காத்திருக்கக்கூடிய சூழல் உள்ளது.நாளொன்றுக்கு 108 ஆம்புலன்ஸூக்கு 50-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வரும்.
இதில் பாதி பேரை மட்டுமேமருத்துவமனைக்கு ஏற்றிச் செல்ல முடியும். பலர் காத்திருந்து பொறுமை இழந்து, தனியாக வாகன ஏற்பாடு செய்து சிகிச்சைக்கு வந்துவிடுகின்றனர். நாளொன்றுக்கு 5 ஆம்புலன்ஸ்களும் சேர்த்து 25 தொற்றாளர்களைதான் வாகனத்தில் ஏற்ற முடியும். இதை பயன்படுத்தி, தனியார் ஆம்புலன்ஸ்கள் லாபம் ஈட்டுகின்றன.
பாதுகாப்பற்ற பணிச்சூழல்
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் - குமார் நகர் வரை செல்ல ரூ.2000 வாங்குகிறார்கள். அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்காட்டில் இருந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல ரூ.1500- வரை வாங்குகிறார்கள். தனியார் ஆம்புலன்ஸ்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க, பெரும் வாய்ப்பாக மாறியுள்ளது. மாவட்டம் முழுவதும் கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு விரைந்து மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல, 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் டெக்னிஷியன்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. கூடுதலாக என். 95 முகக் கவசங்கள் மற்றும் முழுக் கவச உடைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடுதல் ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸை பராமரிக்கும்தனியார் நிறுவனத்தின் மாவட்ட மேலாளர் லிவின் ஜோஸ் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆம்புலன்ஸ் சேவையை தற்போது விரிவுபடுத்தியுள்ளோம். பல்லடம், குடிமங்கலம், குண்டடம்,பெருமாநல்லூர் ஆகிய 4 இடங்களில் ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் (மே 18) விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது நோயாளிகளை அழைத்து வந்தாலும், மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்பதுதான் பிரச்சினை" என்றார்.