

மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறுகதைகளை எழுதி வரும் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த சுரேஷ் ஆறுமுகம் (27), தான் பணியாற்றும் இடத்தில் ஏற்பட்ட அவமானத்தால் உதித்ததுதான் இந்த எழுத்தார்வம் என்கிறார்.
திருச்சியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வரும் சுரேஷ் ஆறுமுகம், தனக்கு கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு சிறுகதைப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்.
பள்ளிப் பருவம் முதலே வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவர், ‘அவமானம்’ என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை நாளிதழ் ஒன்றில் வெளியானதையடுத்து, தான் அவ்வப்போது எழுதி வைத்திருந்த 20 சிறுகதைகளை தொகுத்து முதன்முதலாக ‘மூங்கில் தெப்பக்குளம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து ‘ரத்த தான விழிப்புணர்வுக் கதைகள்’, ‘குழந்தைகளுக்கான நீதிக்கதைகள்’, உலக புத்தகத் தினத்தையொட்டி ‘கார்த்தி 9-ம் வகுப்பு ‘ஆ’ பிரிவு’, ‘கண் தான விழிப்புணர்வுக் கதைகள்’ என சிறு, சிறு புத்தகங்களை வெளியிட்டுள்ளார் சுரேஷ் ஆறுமுகம்.
ஆண்டுதோறும் வரும் முக்கிய 200 தினங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து, வரும் ஜனவரியில் புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டு அதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டுள்ளார். மேலும், தான் வாங்கிப் படிக்கும் நல்ல புத்தகங்களைப் படித்து முடித்தபின், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அவற்றை நூலகங்களுக்கு கொடுத்து விடுகிறார். இதுவரை 200 புத்தகங்களை அளித்துள்ளார்.
வளரும் எழுத்தாளரான சுரேஷ் ஆறுமுகம் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கேட்டரிங் படித்துவிட்டு கரண்டியைப் பிடித்துக் கொண்டிருந்த எனக்கு பேனா பிடிக்கும் திறமையை வெளிப்படுத்தியதே எனக்கு நேர்ந்த ஒரு அவமானச் சம்பவம் தான். என்னுடன் வேலை பார்க்கும் சீனியர் ஒருவர் என்னை கேலி செய்ததை `அவமானம்' என்ற தலைப்பில் சிறுகதையாக எழுதினேன். இது ஒரு நாளிதழில் வெளிவந்த பிறகு எனது எழுத்தின் மீதான நம்பிக்கையும், ஆர்வமும் அதிகரித்தது.
இதன் பிறகே அதிக அளவில் கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. குறிப்பாக கண் தானம், ரத்த தானம் ஆகியவை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நீதிக்கதைகள் ஆகியவற்றை எழுதி என் ஊதியத்தைக் கொண்டு சிறு புத்தகங்களாக அச்சிட்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன்.
பல்வேறு விழிப்புணர்வு கருத்துகள் பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் என் லட்சியம். இதற்கு யாரேனும் உதவினால், இன்னும் அதிக புத்தகங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்த்து இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார் நம்பிக்கையுடன்.