வெள்ளத்தால் பழுதடைந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை பழுதுபார்க்க இலவச முகாம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளத்தால் பழுதடைந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை பழுதுபார்க்க இலவச முகாம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
1 min read

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை கட்டணமின்றி பழுது பார்ப்பதற்கான முகாம்கள் 12-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட வீட்டு மின் உபயோகிப்பாளர்கள், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நோய் தொற்றை தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு அரை கிலோ பிளீச்சிங் பவுடர், 20 குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த 4 மாவட்டங்களிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நீரில் மூழ்கியதால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எவ்வித கட்டணமுமின்றி இந்த வாகனங்களை பழுது நீக்கி சர்வீஸ் செய்து தர டிவிஎஸ், இந்தியா யமஹா, பஜாஜ் மோட்டார்ஸ் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

இதற்கான சிறப்பு முகாம்களை இம்மாதம் 12 முதல் 21 வரை 10 நாட்களுக்கு இந்த நிறுவனங்கள் நடத்தும். நான்கு மாவட்டங்களிலும் உள்ள இந்நிறுவனங்களின் 200-க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் முகாம் நடத்தப்படும். சேவை முகாம் நடக்கும் இடங்கள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in