

சென்னை பள்ளிக்கரணை விஜிபி சாந்தி நகர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் காஜா நஜிமுதீன்(35). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலைகடைக்குச் செல்வதற்காக, வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த டிரான்ஸ்ஃபார்மரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது கார் கதவுகளைத் திறக்க முடியவில்லை. இதனால் நிஜாமுதீன் காரை தொடர்ந்து இயக்க முயன்றபோது, திடீரெனத் தீப்பிடித்தது. காரிலிருந்து வெளியேற முடியாத நிஜாமுதீன், தீயில் சிக்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள், தீயைஅணைத்தனர். பின்னர், அவரதுசடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். கார் மோதியதில் விபத்துக்குள்ளான டிரான்ஸ்ஃபார்மரை பின்னர் மின் வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.