

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவற்காக கண்காணிப்புப் பணிகளில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 50 வயதைக் கடந்த மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புள்ள போலீஸாரும் கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக கடும் வெயிலில், சாலைகளில் நீண்டநேரம் நின்று பணியாற்றுகின்றனர். இதனால், சரியான நேரத்துக்கு உணவருந்த முடியாமலும், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை சாப்பிட முடியாமலும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால், உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்படுவதாக வயது முதிர்ந்த போலீஸார் வருத்தம் தெரிவித் தனர். எனவே, வயது முதிர்ந்த,சர்க்கரை நோய் பாதிப்புள்ள போலீஸாருக்கு ஓய்வளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறைதரப்பில் கூறும்போது, "சர்க்கரைநோய் பாதிப்புள்ள போலீஸார் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தேவையான அனைத்துஉதவிகளும் செய்யப்படுகின்றன. அவர்கள் காவல் நிலையத்தில்மட்டுமே பணிபுரிவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.
மேலும், சோதனைச்சாவடிகளிலும் நிழலில் அமர்ந்து பணியாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருப்பமுள்ள நபர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்" என்றனர்.