

திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆட்சியிலாவது விடியல் கிடைக்குமா என்று பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
கடந்த 1991-ம் ஆண்டு திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் கரியாலி அறிவித்தார். அந்த அறிவிப்போடு திண்டிவனம் பேருந்து நிலைய பணிகள் நின்றுபோனது. அதைத்தொடர்ந்து 2001-ம் ஆண்டு அப்போதை திண்டிவனம் எம்எல்ஏவும் அமைச்சருமான சி.வி.சண்முகம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முயன்றார். அதற்கு அப்போதைய அதிமுக நகர்மன்ற தலைவர் ஹீராசந்த் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முருகம்பாக்கம் ஏரி அருகே நகராட்சிக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை வாங்கிஅதை புதிய பேருந்து நிலையத்திற்கு பயன்படுத்த முடிவெடுக்கப் பட்டது.
இதன் பின்னர் 2005-ம் ஆண்டு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க முன்பணமாக ரூ.6 லட்சமும், மாதம் ரூ.60 ஆயிரம் வாடகையும், ஆண்டுக்கு 5 சதவீத வாடகையை உயர்த்திக் கொள்ளலாம் என அதிமுக நகராட்சி சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது.
பின்னர் 30-12-2005 அன்று தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 33 நாட்கள் இயங்கியது. அப்போது தேர்தல்நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவினர் மாதாமாதம் ரூ.60 ஆயிரம் வாடகை தர முடியாது என கூறி வேறு இடம் பார்க்க தொடங்கினார்கள். வேறு இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்படும் என திமுக நகராட்சி அறிவித்தது. ஆனால் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. பிறகு நகராட்சி பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுத்த இடம் நீர்பிடிப்பு பகுதி என அதிமுகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பின்னர் மண் பரிசோதனை செய்து அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் பிஎஸ்என்எல் டவர் அருகே புதிய நகராட்சி கட்டிடம், அம்மாஉணவகம், சாலைகள், குடிநீர் திட்டப் பணிகள் முடிந்த நிலையில்12-10-2009-ல் வெளியிட்ட அரசாணைப்படி திண்டிவனம் ஏரிப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் பேருந்து நிலையம் அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் முயற்சியால் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் பங்களிப்புடன் ரூ.20 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்க கொள்கை அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 1-11-2017 அன்று ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் புதிய பேருந்து நிலையப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
அமைச்சர் ஆலோசனை
இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர், “திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.
30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய ஆட்சியிலாவது புதிய பேருந்து நிலையத்திற்கு விடியல் கிடைக்குமா என்பதே திண்டிவனம் நகர வாசிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.