

ஊரடங்கை மீறி வழக்கம்போல சுற்றித் திரியும் மக்களால் தூத்துக்குடியில் கரோனாவை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. காய்கறி மற்றும் மளிகைக்கடைகளை மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க வேண்டும். மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர்.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகளில் வாகன நெரிசல் இன்னும் குறையவில்லை. காலை 10 மணி வரை காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் திறந்திருப்பதால், அந்த கடைகளில் கூட்டம்அதிகமாக காணப்படுகிறது. சமூக இடைவெளியை பற்றி மக்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. சாலைகளில் காலை 10 மணிக்கு மேலும் இருசக்கர வாகனங்கள், கார்கள் வழக்கம்போல இயங்குகின்றன.
தொடர்ந்து அதிகரிப்பு
ஊரடங்குக்கு பின்னர் சில மாவட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 1,024 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 5 பேர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை.
இதனால் காவல் துறையினர் தங்கள் நடவடிக்கைகளை நேற்று தீவிரப்படுத்தினர். வாகனங்களை மடக்கி பிடித்து எச்சரிக்கை செய்தனர். காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று தூத்துக்குடி நகரில் புதிய பேருந்து நிலையம், கீழ ரத வீதி, மேலப்பெரிய காட்டன் வீதி, குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு மற்றும் விவிடி சிக்னல் சந்திப்பு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி, தேவையின்றி சுற்றியவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.
அப்போது எஸ்பி பேசும்போது, “ தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்” என்றார்.
“மருந்து வாங்க செல்வதாகவும், மருத்துவமனைக்கு செல்வதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதனால் எச்சரித்து மட்டும் அனுப்ப வேண்டிய நிலை உள்ளது” என, போலீஸார் தெரிவிக்கின்றனர்.
விழிப்புணர்வு தேவை
“அரசின் ஊரடங்கை மதிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே சுற்றினால் கரோனாவை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும்” என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, கரோனாவை ஒழிக்க வேண்டும்” என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி பகுதியிலும் ஊரடங்கை பற்றி கவலையின்றி வாகனங்களில் இளைஞர்கள் பலர் வெளியே சுற்றுகின்றனர். போலீஸார், நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வெளியே சுற்றுவதை அவர்கள் நிறுத்தவில்லை.
சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கரோனா தொற்று பாதிப்பால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்றுமுன்தினம் 2 பேர் உயிரிழந்தனர். கரோனா தாக்கம் குறித்து அச்சப்படாமல் பலரும் தேவையின்றி வெளியே வருகின்றனர். மோட்டார் சைக்கிள்களில் வருவோரை கண்டிப்பாக சோதித்த பின்னரே அனுப்ப வேண்டும். தேவையின்றி சுற்றினால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். கரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டும். இதற்கு ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்” என்றனர்.