

திருச்சியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, முகக்கவசம் மற்றும் மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கி கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து திருச்சி சரக டிஐஜி இசட். ஆனி விஜயா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தனது குழந்தையுடன் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் முகக்கவசம் அணிந்து கொள்வதன் அவசியம் குறித்து விளக்கமளித்து, முகக்கவசம் மற்றும் மரக்கன்று ஆகியவற்றை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது அவர் கூறியது: கரோனா தொற்றை ஒழிக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி மக்கள் நடக்க வேண்டும். இன்று நீங்கள் மரக்கன்றுகள் வைத்தால், அடுத்த தலைமுறைக்காவது ஆக்சிஜனை கிடைக்கச் செய்யும். அதற்காகத்தான் முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசத்துடன் மரக்கன்றுகளையும் வழங்கியுள்ளேன். யாரும் தேவையின்றி வெளியில் நடமாடக் கூடாது என்றார்.