

ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெ டுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தினார்.
ஈழத்தில் உள்ள முள்ளிவாய்க் காலில் தமிழினப் படுகொலை நிகழ்ந்த 12-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், பின்னர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தமிழீ ழத்தில் 2008-2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழர்களைச் சிங்கள படை கொன்று குவித்தது. இதற்கு இந்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைத் தண்டிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து கோரிக்கை எழுப்ப வேண்டும்.
ஈழத்தமிழர்கள் இலங்கை நாட்டுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றனரா? அல்லது தனித்து வாழ விரும்புகின்றனரா என்பதை அவர்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும். இக்கோரிக்கையை இந்திய அரசு முன்வைக்க வேண்டும். இதற்கு உலக அளவில் வாழும் 12 கோடி தமிழர்கள் குரல் எழுப்பினால் நீதி கிடைக்கும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைக் குழு உறுப்பினர் பழ.ராசேந்திரன், மாவட்டச் செயலர் நா.வைகறை, நிர்வாகிகள் ராசு.முனியாண்டி, ராமு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.