

கலப்பு திருமணம் செய்து கொண்ட இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தாரை கடந்த 3 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்து சித்ரவதை செய்துள்ளதாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்மாள் (64). இவர், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில் கூறியிருப்ப தாவது: மின்னூர் கிராமத்தில் எனது மகன் சரவணன், மருமகள், பேத்தி கோமளா (23) ஆகியோருடன் வசித்து வருகிறேன். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது பேத்தி கோமளா, அதே பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (25) என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இதையறிந்த ஊர் நாட்டாண்மை சதீஷ்குமார் மற்றும் உதவி நாட்டாண்மை ராஜேந்திரன் ஆகியோர் எங்கள் குடும்பத்துக்கு 5,500 ரூபாய் அபராதம் விதித்து, எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறினர். இதனால், கிராம மக்கள் எங்கள் குடும்பத்தாரிடம் பேசுவதில்லை. ஊரில் நடைபெறும் திருவிழா, சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி என எதிலும் கலந்து கொள்ள ஊர் முக்கியஸ்தர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. எங்கள் குடும்பத்துக்கு தேவையான பொருட்களை ஆம்பூர் நகர் பகுதிக்கு சென்றே வாங்கி வருகிறோம்.
இந்நிலையில், எங்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான், எனது மகன் சரவணனுடன் அங்கு சென்றேன். அப்போது, அங்கு வந்த நாட்டாண்மை சதீஷ்குமார் எங்களை அவமானப்படுத்தி இங்கெல்லாம் வரக்கூடாது என நாட்டாண்மை கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியாதா? எனக்கேட்டு எங்களை அங்கிருந்து வெளியேற்றி அவமானப்படுத்தினார்.
கடந்த 3 ஆண்டுகளாக சொல்ல முடியாத துயரத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். எனவே, எங்களை ஊரை விட்டு வெளியேற்றிய நாட்டாண்மை சதீஷ்குமார், ராஜேந்திரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, போலீஸார், மின்னூர் ஊர் பெரியவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.