முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நளினி ரூ.5 ஆயிரம் நிதியுதவி
வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளிக்க விருப்ப மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படும் பணிக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனை ஏற்றுப் பெரு நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், மாதாந்திர சம்பளதாரர்கள், தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பில் இருந்து தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளிக்க முன்வந்துள்ளார். இது தொடர்பாகப் பெண்கள் தனிச்சிறை அதிகாரிகளிடம் நளினி, இன்று (மே-18) அளித்துள்ள மனுவில் ‘‘தனது சிறைவாசி வைப்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது வைப்பு நிதித் தொகை குறித்தும் அவரது விருப்பத்தின் பேரில் அதில் இருந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாகச் சிறைத் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘நளினி அளித்துள்ள விருப்ப மனுவின் மீது சிறைத் துறை தலைமையிடம் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகே அவரது வைப்புத் தொகையில் இருந்து ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படும். விரைவில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அந்தப் பணம் அனுப்பப்படும்’’ என்று தெரிவித்தனர்.
