Published : 18 May 2021 05:51 PM
Last Updated : 18 May 2021 05:51 PM

ஊரடங்கு விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரெனால்ட் நிசான் கார் மற்றும் விப்ரோ சிலிண்டர் ஆகியவை செயல்பட அனுமதித்ததை எதிர்த்து ஊழியர் சங்கங்கள் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முழு ஊரடங்கில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு என்றாலும், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது ஊரடங்கின் பயனுக்கு எதிரானது என வாதிடப்பட்டது.

கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றவில்லை, மருந்துகள், தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நிலையில் அரசின் உத்தரவில் பொதுநலன் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 3 ஷிப்டுகளை 2 ஆகக் குறைத்து அதிக ஊழியர்கள் ஒரே இடத்தில் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிசான் கார் நிறுவனம் தரப்பில், 5000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள், தனித்துவமான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன, இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை, ஷிப்ட்டும் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, நிறுவனம் மற்றும் பணியாளர்களின் பொருளாதார நிலையை ஆராய்ந்த பிறகே அரசால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இயங்க வேண்டுமென கட்டாயமாக்கவில்லை என்றும், குறிப்பிட்ட நிறுவனம்தான் அதில் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

ஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், எந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படப் போகிறார்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது என ரெனால்ட், விப்ரோ நிறுவனங்கள் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளனர்.

ஊரடங்கில் விலக்கு பெற்ற ஆலைகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும், தனிமனித விலகல் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றவில்லை என்றால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு மே 24ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x