

கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிஹார் சிறப்புக் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 74 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற குழந்தைகளைத் தனிமைப்படுத்தி விடுதியிலுள்ளவர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கில்ட் ஆஃப் சர்வீஸ் பாலவிஹார் பள்ளி உள்ளது. இங்கு சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான கல்வி கற்பிக்கப்படுகிறது. கரோனோ தொற்றின் இரண்டாவது அலை காராணமாக தமிழகம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
ஆனால், பாலவிஹார் குழந்தைகள் பள்ளி விடுதியில் தங்கியுள்ளனர். மொத்தம் 172 குழந்தைகள் உள்ளனர். 8 ஊழியர்கள் மூலம் சிறப்புக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வேகமாகப் பரவும் கரோனா பரவல் பாலவிஹார் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.
காப்பக வளாகத்தின் உள்ளே தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பாடம் நடத்த வந்த ஆசிரியர் ஒருவர் மூலம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மாநகராட்சிக்குத் தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து கரோனா பரிசோதனை செய்ததில் 8 ஊழியர்கள் உட்பட 74 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
மீதமுள்ள குழந்தைகளுக்குத் தொற்று இல்லை என்பதால் அவர்கள் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டனர். தொற்று பாதித்த குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இதுகுறித்துக் காப்பக நிர்வாகம் அளித்த விளக்கம்:
“கீழ்ப்பாக்கம் பாலவிஹார் சிறப்புக் குழந்தைகள் மையத்தில் 74 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவர் தலைமையிலான குழுவினரின் நேரடிக் கண்காணிப்பில் குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தைக்கு பாதிப்பு இருப்பதாகத் தெரியவரவே, நிர்வாகிகள் அறிவுறுத்தலின் பேரில் 170 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில் 74 குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மாநகராட்சி மருத்துவக் குழுவினர் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொற்று பாதிப்பால் மாநகராட்சி காப்பகத்துக்கு சீல் வைத்துள்ளதால் தொற்று பரவாமல் இருக்க உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை”.
இவ்வாறு காப்பக நிர்வாகம் தெரிவித்துள்ளது.