Published : 18 May 2021 04:44 PM
Last Updated : 18 May 2021 04:44 PM

நீதித்துறை நடுவர் நீஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: அரசின் சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சென்னை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நீதித்துறை நடுவர் நீஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நீஷ் (42). கடலூர் மாவட்டம் சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவராகப் பணியாற்றி வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றப் பணியிடமாற்றம் மூலம் நெல்லை மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவராக நியமிக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவராகக் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பதவி ஏற்றார். பதவியேற்ற இரண்டு நாளில் (ஏப் 28) உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பில் சென்றார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி 16ஆம் தேதி இரவு 11:45 மணியளவில் உயிரிழந்தார். உயிரிழந்த நீதித்துறை நடுவர் நீஷுக்குத் திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

அவரது மறைவு நீதித்துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் அறிக்கை:

“கரோனா நோய்த் தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், நெல்லை மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீஷ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் நீத்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நீதித்துறை அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, சிறப்பு நேர்வாகக் கருதி, 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x