

பெரிய மார்க்கெட்டைப் புதிய பஸ் நிலையத்துக்கு இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்துக் கடையடைப்பு நடத்தியதுடன், கொள்முதலை வர்த்தகர்கள் நிறுத்தியதால் காய்கறி தட்டுப்பாடும், விலை உயரும் சூழலும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ளது.
புதுவையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் காய்கறிக் கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவதாக அரசுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் பெரிய மார்க்கெட்டில் உள்ள மொத்தம், சில்லறை, அடிக்காசு காய்கறிக் கடைகளை விசாலமான இடத்துக்கு மாற்ற அரசு முடிவு செய்தது.
கடந்த ஆண்டைப் போல புதிய பஸ் நிலையம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் ஆகிய இடத்துக்கு மார்க்கெட்டை மாற்ற ஆட்சியர் பூர்வாகார்க் உத்தரவிட்டார். இடமாற்றம் செய்யப்பட்டு காய்கறிக் கடைகள் 17ஆம் தேதி முதல் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சியர் உத்தரவை பெரிய மார்க்கெட் வியாபாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் காய்கறி மூட்டைகளைப் பாதுகாக்க வசதியில்லை என்று கூறி இடமாற்றம் செய்யாமல் தொடர்ந்து பெரிய மார்க்கெட்டிலேயே வியாபாரம் செய்தனர். காய்கறி மொத்த வியாபாரிகள் பெரிய மார்க்கெட்டில் வியாபாரத்தைத் தொடர வேண்டும். சில்லறை, அடிக்காசு வியாபாரிகள் நேருவீதி சிறைச்சாலை வளாகத்தில் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி காய்கறிகளைக் கொள்முதல் செய்யப் போவதில்லை எனத் தெரிவித்து நிறுத்திவிட்டனர். இதனால் காய்கறிகள் ஏதும் வரவில்லை. அத்துடன் ஆட்சியரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடையடைப்பும் நடத்தினர். ஓரிரு நாள் இதே நிலை நீடித்தால் புதுச்சேரியில் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். விலையும் உயரக்கூடும்.
இதுபற்றி காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவகுருநாதன் கூறுகையில், "பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தோம். புதிய பஸ் நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. காய்கறி மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை. இதை எடுத்துக்கூறியும், கட்டாயப்படுத்தி அதிகாரிகள் தங்களின் முடிவைத் திணிக்க நினைத்தனர். மின் வசதி, மேற்கூரை வசதியும் இல்லை. மின் இணைப்புக் கட்டணத்தை எங்களைச் செலுத்தும்படி கூறுகின்றனர். கழிப்பறை இருந்தும் தண்ணீர் வசதியில்லை. இதனால்தான் நாங்கள் இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
சிறைச்சாலை வளாகத்தில் சில்லறை வியாபாரிகள் விற்பனை செய்யலாம். அதற்கு அனுமதி கோரி வருகிறோம். எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் காய்கறிகள் கொள்முதலை நிறுத்தியுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.