முகக்கவசம் அணியாமல் சென்ற 38 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு; வேலூர் சரக டிஐஜி தகவல்

வேலூர் செல்லியம்மன் கோயில் எதிரில் நடைபெற்ற வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த டிஐஜி காமினி. 
வேலூர் செல்லியம்மன் கோயில் எதிரில் நடைபெற்ற வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த டிஐஜி காமினி. 
Updated on
2 min read

வேலூர் சரகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற 38 ஆயிரம் பேர் மீது விதிமீறல் வழக்குப் பதிவு செய்திருப்பதாக டிஐஜி காமினி தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் நோக்கில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக காய்கறி, பால், இறைச்சிக் கடைகள், மளிகை உள்ளிட்ட கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்குப் பிறகு வாகனங்களில் செல்லத் தடை விதித்துள்ளதுடன் மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 10 மணிக்குப் பிறகு காவல்துறையினர் முக்கியச் சாலை சந்திப்புகளில் இரும்புத் தடுப்புகளை அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் முக்கியச் சாலைகளில் காவல்துறையினர் பந்தல் அமைத்து வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்திய பிறகே செல்ல அனுமதி அளிக்கின்றனர்.

இந்நிலையில், வேலூர் நகரில் நடைபெறும் வாகனத் தணிக்கைப் பணிகளை வேலூர் சரக டிஐஜி காமினி இன்று (மே 18) திடீர் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் செல்லியம்மன் கோயில் அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 45 இடங்களில் காவல்துறையினரின் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், வேலூர் உட்கோட்டத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இதில், அடையாள அட்டையுடன் அத்தியாவசியப் பணிக்காகச் செல்பவர்கள், அடையாள அட்டை இல்லாமல் செல்பவர்கள் எனத் தனித்தனிப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகன சோதனையின்போது பொதுமக்களிடம் காவல்துறையினர் கண்ணியமாகவும், ஆவணங்களைச் சரியாக ஆய்வுசெய்து விசாரித்தும் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளோம். வேலூர் மாவட்டத்தில் மட்டும் விதிகளை மீறி அவசியம் இல்லாமல் வெளியில் சுற்றியதாக 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தியுள்ளோம். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். அவரவர்களின் பகுதியில் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும்.

இ-பதிவு முறை அமலில் இருப்பதால் மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து விசாரித்த பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்துடன் தொடர்புடையதாக வேலூர் மாவட்டத்தில் 6 சோதனைச் சாவடிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சோதனைச் சாவடிகள் உள்ளன. இங்கு இ-பதிவு இல்லாத வாகனங்களுக்கு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பி வைக்கின்றோம்.

மேலும், முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை என நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் காவல் சரகத்தில் இதுவரை முகக்கவசம் அணியாத 38 ஆயிரத்து 43 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றாத 2,657 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

அப்போது, வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in