

நீலகிரி மாவட்டத்துக்குள் காலை 10 மணிக்கு மேல் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக, ஒரு நாளில் 350-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், பொதுமக்கள் அலட்சியமாகச் சுற்றித் திரிவதால், தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, இன்று (மே 18) முதல் நீலகிரி மாவட்டத்துக்குள்ளும் காலை 10 மணிக்கு மேல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல இ-பதிவு கட்டாயம் தேவை என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:
"நீலகிரி மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 12 கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கூடலூரில் 200 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் நாளை முதல் திறக்கப்படும். 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூடுதலாக உள்ளன.
காலை 10 மணிக்கு மேல் தேவையின்றி பொதுமக்கள் சுற்றுவதைத் தடுக்க இ-பதிவு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பதிவு இன்றி சுற்றித் திரிந்தால், அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
தேயிலை, மலை காய்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல இ-பதிவு தேவையில்லை".
இவ்வாறு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
உதகை அருகே தலைகுந்தா சோதனைச்சாவடியில் புதுமந்து காவல்நிலைய ஆய்வாளர் எஸ்.ராஜேஸ்வரி தலைமையில், காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் ஒரு ஆய்வாளர் தலைமையில், காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். மாவட்டத்துக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்துக்குச் செல்ல இ-பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை வாகன ஓட்டுநர்களிடம் சோதனை நடத்தினர்.