

காரைக்கால் மாவட்டத்தில், மத்திய அரசின் கரீஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா இன்று தொடங்கி வைத்தார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு கரீஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், மக்களுக்கு நிவாரணமாக அறிவித்த இலவச அரிசி வழங்கும் பணி காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (மே 17) தொடங்கப்பட்டது.
குரும்பகரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அரிசி வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வடமட்டம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அரிசி வழங்கும் பணியை ஆட்சியர் பார்வையிட்டார்.
நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட 17 அரசுப் பள்ளிகளில் அரிசி வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 2 மாதங்களுக்கான அரிசி வழங்கப்படுகிறது. அடுத்தடுத்து, மற்ற சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் அரிசி வழங்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
தடுப்பூசி
இலவச அரிசி வழங்கப்படும் அந்தந்தப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே, கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரிசி வாங்க வரக்கூடிய விருப்பமுடைய 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களையும் ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து, பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) எம்.ஆதர்ஷ், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் எஸ்.சுபாஷ், மண்டலக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுநாயகம், நலவழித்துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாய்க்குட்டிகளின் பசியைப் போக்கச் செய்த ஆட்சியர்
வடமட்டம் அரசு நடுநிலைப்பள்ளியில் இலவச அரிசி வழங்கும் பணியைப் பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, பள்ளியின் வாயிலில் 4 நாய்க் குட்டிகள் கவனிப்பாரின்றி பசியால் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
உடனடியாக அந்த நாய்க்குட்டிகளுக்குப் பால் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், உடனடியாகப் பால் வாங்கி வரப்பட்டு அந்த நாய்க் குட்டிகளுக்கு அளிக்கப்பட்டது.