Last Updated : 18 May, 2021 03:10 PM

 

Published : 18 May 2021 03:10 PM
Last Updated : 18 May 2021 03:10 PM

எளிமையான குடியிருப்பில் ராஜா போல் வாழ்ந்த கி.ரா.

லாஸ்பேட்டை உழவர்சந்தை பின்னால் உள்ள எளிமையான குடியிருப்பில் ராஜா போல் வாழ்ந்தவர் எழுத்தாளர் கி.ரா. எப்போது சென்றாலும் ஏதாவது எழுதியபடி இருப்பார். உரையாடவும் வரிசையாக பலரும் வந்தபடி இருப்பார்கள்.

இதற்கு நடுவிலும், அவரது மனைவி கணவதி அம்மாள் மறையும்வரை ஏதாவது விசயத்தை இருவரும் பரிமாறிக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களுக்கு செப்டம்பர் 16 மறக்க முடியாத நாள். அவர்களின் திருமண நாளும், கி.ரா.வின் பிறந்தநாளும் ஒரே நாளில் வரும் என்பதால் இருவருக்கும் அது மிகவும் முக்கியமான நாளாகத் திகழ்ந்தது.

சில சமயம் விளையாட்டாக உங்க திருமணத் தேதி ஞாபகமிருக்கா என்று அம்மாவிடம் கேட்டால், "16.9.54" என உடன் பதிலளிப்பார் கி.ரா.

கி.ரா.- கணவதி அம்மாளின் திருமண வாழ்வும் எளிமையாக இல்லை. 19 வயதில் திருமணமாகி வந்த கணவதிக்கு, திருமணம் ஆகும்போதே கி.ரா.வுக்கு காசநோய் பாதிப்பு என்ற விசயம் தெரிந்தது. முக்கியமாக அக்காலத்தில் டிபி என்பதால் கி.ரா. ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டார் என அவர் காதுபடவே பேசியதைத் தாண்டி கைப்பிடித்தார்.

முதல் குழந்தை மல்லிகா பிறந்து, தனது அம்மா வீட்டில் கணவதி இருந்தபோது சரியான கவனிப்பு இல்லாமல் குழந்தை இறந்தது. அதையடுத்து வைராக்கியத்துடன் சிறு வயதில் அடுத்த பிரசவங்களுக்குத் தனது தாய் வீட்டுக்குச் செல்லாமல் இருந்துள்ளார் கணவதி. கணவர் மீதான அன்பால் குடும்பப் பொறுப்பை கணவதி கையில் எடுத்தார்.

நள்ளிரவு ஒரு மணிக்கு குழந்தைகளுடன் சென்று வயலில் தண்ணீர் பாய்ச்சி, வயல் வேலைகளை மட்டுமில்லாமல் குடும்பப் பொறுப்பையும் கையில் எடுத்து கி.ரா.வைக் குழந்தைபோல் பார்த்துக் கொண்டவர் கணவதி. அதனால் கி.ரா.வுக்கு எப்போதும் கணவதி அம்மாள் மீது ரொம்பப் பாசம்.

தனக்கு வியாதி இருந்ததால் குழந்தைகளைக் கொஞ்சக்கூட கி.ரா.வுக்குத் தயக்கமிருந்தது. அத்துடன் கி.ரா. எழுதும் முதல் கையெழுத்து பிரதியைப் படிப்பது கணவதி அம்மாள்தான். புதுச்சேரி வந்த பிறகு பல நிகழ்வுகளுக்கும் தனது மனைவியுடன் இணைந்தே வருவார் கி.ரா. பல நிகழ்வுகளில் மேடையில் அமர்ந்தாலும் தனது மனைவிக்கும் இருக்கை போட்டு பக்கத்தில் அமரவைத்து அழகு பார்த்தவர் கி.ரா. என்பது பலருக்கும் தெரியும். ஜிப்பா போட்டு ஷேவ் செய்து காட்சி தந்த அவர் திடீரென்று சில ஆண்டுகளாக தாடி வைப்பார், சட்டை அணிவதையும் தவிர்க்கத் தொடங்கினார். இதுதான் பிடித்திருக்கிறது என்பார் இயல்பாக.

மனைவியைப் பற்றி இயல்பாகப் பேசுவார், "திருமணமாகி வரும்போது அவருக்கு சமைக்கத் தெரியாது. புளிச்சாறுதான் வைப்பார். ஆச்சரியமாக சில வாரங்களிலேயே அருமையாக சமைக்கத் தொடங்கினார். அப்படி மணக்கும்" என ரசித்து பேசியபடி இருப்பார்.

இருவரிடமும் பேசியபோது கூறிய ஒரு வார்த்தை "எங்களுக்குள் சண்டையே வந்ததில்லை" என்பதுதான். மனைவியின் மீதான நேசிப்பை கி.ரா.வும், கணவர் மீதான பாசத்தை கணவதி அம்மாளும் நொடிக்கு நொடி உணர்த்தியபடியே வாழ்ந்தனர். கணவதி அம்மாள் இறந்த இரு ஆண்டுகளுக்குள் கி.ரா. இப்போது அவரைத் தேடிச் சென்றுள்ளார். அதுவும் காதல்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x