

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குடியாத்தம் அரசு மருத்துவமனையின் பொது புற நோயாளிகள் பிரிவும், கரோனா தடுப்பூசி போடும் பிரிவும் நாளை முதல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கரோனா தொற்றுப் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், புற நோயாளிகளுக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. இதனால் பொது புற நோயாளிகள் பிரிவும், கரோனா தடுப்பூசி போடும் பிரிவும் அரசு மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பொது புற நோயாளிகள் பிரிவு (காய்ச்சல் புற நோயாளிகள் தவிர) மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பிரிவு ஆகிய இரண்டும் நாளை (19ஆம் தேதி) முதல் குடியாத்தம் நடுப்பேட்டை மற்றும் நெல்லூர்பேட்டை மாட்டுச் சந்தை திடல் அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன.
குடியாத்தம் அரசு மருத்துவமனையின் முன்பக்க வாசல் வழியாக அவசர சிகிச்சை மற்றும் பிரசவ வார்டிற்கு வரும் நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அரசு மருத்துவமனையின் பின்பக்கம் வாசல் வழியாக காய்ச்சல் மற்றும் கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு மூச்சுத் திணறலுடன் வரும் நோயாளிகளுடன் ஒரு நபர் மட்டும் மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். உதவியாளர் தேவைப்படும் நோயாளிகளின் உறவினர் ஒருவருக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்படும். கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் உள்ளதால் தேவையின்றி வெளி நபர்கள் அரசு மருத்துவமனைக்கு உள்ளே வரவேண்டாம். விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் தெரிவித்துள்ளார்.