பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து; மகாராஷ்டிர அரசின் முடிவை மாற்ற காங்கிரஸ் கட்சி தலையிட வேண்டும்: திருமாவளவன்

திருமாவளவன்: கோப்புப்படம்
திருமாவளவன்: கோப்புப்படம்
Updated on
2 min read

பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள மகாராஷ்டிர அரசின் முடிவை மாற்ற காங்கிரஸ் கட்சி தலையிட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (மே 18) வெளியிட்ட அறிக்கை:

"மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு, அங்கு எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உரிமையை ரத்து செய்துள்ளது. இதனை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தப் பிற்போக்குத்தனமான முடிவை உடனே திரும்பப் பெறுமாறு மகாராஷ்டிர அரசுக்கு அறிவறுத்த வேண்டுமென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மராத்தா பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்த மகாராஷ்டிரா அரசின் சட்டம் செல்லாது என, அண்மையில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. மராத்தா பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை மகாராஷ்டிராவில் உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் எவரும் எதிர்க்கவில்லை. ஆதரிக்கவே செய்கின்றனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அம்மாநிலத்திலுள்ள மராத்தா சாதி அமைப்புகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு மகாராஷ்டிர அரசு பதவி உயர்வில் 33% இட ஒதுக்கீடு அளித்திட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. அதற்குப் பணிந்து மகாராஷ்டிர அரசும் அந்த உத்தரவை இப்போது ரத்து செய்திருக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது மட்டுமல்ல; சாதிவெறிக்குப் பணிந்து போவதும் ஆகும். எனவே, இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் மகாராஷ்டிர அரசின் உத்தரவை ஏற்கெனவே மும்பை உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. அதற்கு எதிராக, மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. அந்த மேல்முறையீட்டு மனுவில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டியதன் தேவையை அது விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது. தற்போது மகாராஷ்டிர அரசு எடுத்திருக்கும் முடிவு உச்ச நீதிமன்றத்தில் அது தொடுத்திருக்கும் வழக்குக்கு முரணானதாகும்.

மராத்தா இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, தற்போது மத்திய அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம், அந்த இட ஒதுக்கீடு மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான உரிமையைப் பறிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த முடிவால், பல்லாயிரக்கணக்கான எஸ்சி, எஸ்டி, ஓபிசி அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அநீதிக்கு காங்கிரஸ் கட்சியும் துணை போவது வேதனை அளிக்கிறது.

எனவே, இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு இந்த முடிவைத் திரும்பப்பெறுமாறு சிவசேனா - காங்கிரஸ் அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in