

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமெடுத்துள்ளது. நேற்று (மே 17) மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 33,075 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 2,31,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் நேற்று 6,150 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், வீட்டுத் தனிமையில் இருப்போர் உட்பட 48,156 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று தமிழகம் முழுவதும் 335 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 18,005 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை கர்ப்பிணிகள், குழந்தைகள், இளைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கடுமையாக பாதித்து வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, எல்.முருகன் இன்று (மே 18) தன் ட்விட்டர் பக்கத்தில், "என் இளைய மகன் இந்திரஜித்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 தினங்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனக்கும், என் மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை. நாங்கள் எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்" எனப் பதிவிட்டுள்ளார்.