

தமிழகத்தில் கரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்ட நிலையில், புதிதாகப் பதிவு செய்த 2.14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை நிவாரணத் தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோன பரவல் காரணமாக ஊரடங்கு அமலானது. முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் முதல் கையெழுத்தாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணத் தொகைக்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதில் புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணத் தொகை கேட்டு கோரிக்கை வந்தது. அதையும் நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்-2021 தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தொற்றால் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் கருணாநிதி பிறந்த நாள் அன்று ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்திருந்தார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு நோய்களைத் தடுக்கும் பொருட்டு தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா நோய்த்தொற்று காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையிலும் பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் 4153.39 கோடி ரூபாய் செலவில் மே மாதத்தில் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணத் தொகையை முதல் தவணையாக வழங்க ஏற்கெனவே முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய அரிசி குடும்ப அட்டைகள் பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கும் வகையில் ரூ.42.99 கோடி செலவில் மே மாதத்தில் 2000 ரூபாய் நிவாரணத் தொகையை முதல் தவணையாக வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.