Last Updated : 18 May, 2021 01:25 PM

 

Published : 18 May 2021 01:25 PM
Last Updated : 18 May 2021 01:25 PM

எழுத்தாளர் கி.ரா. வீட்டை நூலகமாக மாற்றப் பரிசீலனை: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தகவல்

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வீட்டை நூலகமாக மாற்றுவது தொடர்பாகப் பரிசீலனை செய்யப்படும் என்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து ஆளுநர் தமிழிசை அஞ்சலி செலுத்திய பின்பு தெரிவித்தார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் ஆளுநர் தமிழிசை கூறுகையில், "கரிசல் காட்டு மண்ணுக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்த பிரம்மாண்ட எழுத்தாளர். பேராசிரியராகப் புதுச்சேரி வந்து ஊருக்கே ஆசிரியரானார். பலரும் அவரால் உருவாக்கப்பட்டுள்ளனர். அவரை இழந்து வாழும் இலக்கிய உலகுக்கு ஈடு சொல்ல முடியாத நிலை. புதுச்சேரியில் அவரது உடலை அடக்கம் செய்தால் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யும் எண்ணத்தில் வந்தேன்.

கி.ரா.வின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல குடும்பத்தார் நினைத்துள்ளார்கள். அரசு ரீதியாகத் துணை நிற்கவும், உதவுவும் உறுதி தருகிறேன். அதேபோல் தமிழகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய இருப்பது மரியாதைக்குரியது. புதுச்சேரி அரசு மரியாதையுடன் தமிழக அரசும் மரியாதை செய்வது தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதை. கி.ராஜநாராயணன் வாழ்ந்த இல்லத்தில் நூலகம் அமைப்பது தொடர்பான கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்" என்று குறிப்பிட்டார்.

மேலும் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நாட்டுப்புற இலக்கியத்தை முதன்மைப்படுத்தியதில் கி.ராஜநாராயணனுக்குத் தனி இடம் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ்க் கதை இலக்கியத்தில் புதிய திசைவழியை உருவாக்கிக் கொடுத்த கரிசல் இலக்கியத்தின் முன்னோடி .கி.ரா. என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி. ரவிக்குமார், எம்எல்ஏக்கள், பொதுமக்கள் எனப் பலரும் கி.ரா.வின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x