பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும்: முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை

பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும்: முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை
Updated on
1 min read

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு கரோனா தொற்றைக் கணக்கில் கொண்டும், அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டும் நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் வைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உயர் நீதிமன்றம் பல முறை பரோல் தந்துள்ளது. உச்ச நீதிமன்றமும் பரோல் வழங்கியுள்ளது.

தற்போது பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் நாடெங்கும் கரோனா இரண்டாவது பரவல் அலை அதிகரித்துள்ளது. பெருந்தொற்றுப் பரவல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் முடக்கத்தை ஏற்படுத்திய பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்படின் பரோல் வழங்கவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொற்று எளிதில் பரவும் அபாயமும், அப்படித் தொற்று ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பேரறிவாளன் நிலையைக் கருத்தில் கொண்டும், அவரது உடல்நிலை மற்றும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அற்புதம்மாளின் ட்விட்டர் பதிவு:

“சிறைகளில் பரவி வரும் கரோனா கிருமி தொற்றும், மரணங்களும் மிகுந்த அச்சத்தைத் தருகிறது. ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் அறிக்கை தந்துள்ளனர். மேலும், அறிவுக்குத் தடைப்பட்டுள்ள மருத்துவத்தைத் தொடர வேண்டியுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்கக் கோரி 10ஆம் தேதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே, முதல்வர் ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு அற்புதம்மாள் வேண்டுகோள் வைத்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாளுக்கு ஆதரவாகப் பேசிவந்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போதுள்ள கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அற்புதம்மாள் வேண்டுகோளை ஏற்கும் முடிவை அறிவிப்பார் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in