Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

2-வது முறையாக நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சட்டப்பேரவை கட்சித் தலைவர் தேர்வில் இழுபறி: முடிவெடுக்கும் அதிகாரம் சோனியா காந்தியிடம் ஒப்படைப்பு

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதால் முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 18 இடங்களில் வென்றது. அதைத் தொடர்ந்துசட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த 7-ம் தேதி நடந்தது. தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதால் எந்த முடிவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், 2-வது முறையாககாங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்சென்னை சத்தியமூர்த்தி பவனில்நேற்று பகல் 12 மணிக்கு நடந்தது.2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மேலிடப் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

இவர்கள் தவிர, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில செயல் தலைவர்கள், எம்.பி.க்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ்இளங்கோவன், கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோரும பங்கேற்றனர்.

மொத்தமுள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 11 பேர் முதல்முறையாக வெற்றி பெற்றவர்கள். எனவே, அவர்கள் தலைவர் பதவிக்கான போட்டியில் இல்லை. இரண்டு, மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த கு.செல்வப்பெருந்தகை (பெரும்புதூர்), ஏ.எம்.முனிரத்தினம் (சோளிங்கர்), ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), எஸ்.விஜயதரணி (விளவங்கோடு), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தலித் ஒருவருக்கு வாய்ப்புவேண்டும் என்று செல்வப்பெருந்தகையும், 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள பெண் எம்எல்ஏவான தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று விஜயதரணியும், கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

2-வது முறையாக நேற்று நடந்த கூட்டத்திலும் ஒருமித்த முடிவுஏற்படவில்லை. இதனால் முடிவெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாளில்அவர், சட்டப்பேரவை காங்கிரஸ்கட்சித் தலைவர், துணைத் தலைவர்,கொறடா ஆகியோரை அறிவிப்பார் என்றும் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x