Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

மக்களின் அவசர காரணங்கள், அத்தியாவசிய தொழில் நிறுவனங்களுக்கு உரிய ஆவணத்துடன் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பதிவு பெறலாம்

திருமணம், இறப்பு, மருத்துவசிகிச்சை போன்ற அவசர காரணங்கள் மற்றும் அத்தியாவசிய தொழிற்சாலைகளுக்கு உரியஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பதிவு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்துக்குள் மற்றும் வேறு மாவட்டங்களுக்கு செல்வது போன்றவற்றுக்கு இ-பதிவு முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முழு ஊரடங்கு காலத்தில், இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்தது. அதில் அனுமதி பெற தாமதம் ஏற்பட்டதால், இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டது.

ஒப்புதல் தேவையில்லை

இதற்கு https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். உரிய அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு தேவையில்லை. பதிவு செய்ததும், தானாகவே இ-பதிவு கிடைக்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் எங்கு, எதற்காக செல்கின்றனர் என்பதை கண்காணிக்க முடியும்.

பொதுமக்களை பொருத்தவரை, திருமணம், முக்கிய உறவினர்கள் இறப்பு, இறுதிச் சடங்கு நிகழ்வுகள், மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, நேர்காணல் போன்றவற்றுக்கு இ-பதிவு வழங்கப்படுகிறது.

இதுதவிர, அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தொடர்ந்து இயங்க வேண்டிய தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கும் இ-பதிவு அளிக்கப்படுகிறது.

எந்த நிறுவனத்துக்கு அனுமதி?

குறிப்பாக, தகவல் தொடர்புசேவை வழங்கும் நிறுவன பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்துசெயல்படுதல், மருத்துவம், நிதி,போக்குவரத்து மற்றும் பிறமுக்கியமான சேவைகளின் பின்தள செயல்பாடுகளுக்கான தரவுமையங்கள், ஐடி கட்டமைப்பு பராமரிப்பு செயல்பாடுகள் போன்றவற்றுக்கும், மருந்துகள், துப்புரவு பொருட்கள், ஆக்சிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவதுணி ரகங்கள், மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கான உற்பத்தி அலகுகள், கால்நடைகளுக்கான உணவு பதப்படுத்தும் தொழில்கள், உரம், விவசாய இயந்திரங்கள் உள்ளிட்ட உற்பத்தி அலகுகள், ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி ஆர்டர்கள் கொண்டஅவற்றின் துணை நிறுவனங்கள், பாதுகாப்புத் துறை உபகரணங்கள் உற்பத்தி, பாதுகாப்பு, வேளாண்மை, சுகாதாரத் துறை வாகன உற்பத்தி, இவற்றுக்கான பேக்கேஜிங் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெரிய இரும்பு, சிமென்ட்ஆலைகள், பெயின்ட் உள்ளிட்ட வேதியியல் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள், உரத் தயாரிப்பு, மிதவை கண்ணாடி ஆலைகள், பெரிய வார்ப்பு ஆலைகள், டயர் உற்பத்தி, காகித உற்பத்தி ஆலைகள், கைபேசி மற்றும் நுகர்வோர் மின்னணு தயாரிப்பு ஆலைகள், ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலைகள், பெரிய ஜவுளி தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கான வாகனம், தொழிலாளர் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அனுமதி பெறுவது எப்படி?

இதற்கு, https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் என்றால், அனுமதிக்கப்பட்ட பயணங்களுக்கான ஆவணங்களையும், நிறுவனங்கள் என்றால்நிரந்தர கணக்கு எண் ( பான்) அட்டையையும் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். பொதுமக்களுக்கு ரயில், விமானம் மற்றும் தனியார் வாகன போக்குவரத்துக்கும், தொழிற்சாலைகள் என்றால்,அனைத்து தரப்பு வாகனங்களுக்கும் இ-பதிவு வழங்கப்படுகிறது.

பொதுமக்கள், தொழில் துறையினர் ஆகியோர் இருசக்கர வாகனங்களில் சென்றாலும் இ-பதிவு அவசியம்.

பொதுமக்களோ, தொழில் நிறுவனங்களோ, குழுவாகவோ, தனியாகவோ பயணிக்க இ-பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். வாகன எண், எத்தனை பேருக்கான பயணம், என்ன காரணம் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

தொழில் துறையினரை பொருத்தவரை, தொடர் செயல்பாடுகள் கொண்ட தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளின் பணியாளர்கள் வரும் வாகனங்கள், பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இவற்றுக்கு இ-பதிவு அவசியம்.

ஒருமுறை பயணம் முடித்த பிறகு, தொடர்ந்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து மீண்டும் மீண்டும் இ-பதிவு மேற்கொண்டு அனுமதி பெறலாம். இவை தொடர்பான தகவல்களை பெற தனியாக தொழில் துறையில் உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமண இ-பதிவு நிறுத்திவைப்பு

தமிழக அரசு திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு இ-பதிவு பெற்றுச் செல்லலாம் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 16-ம்தேதி இணையதளம் செயல்படத்தொடங்கியதும், ஏராளமானோர் திருமணத்துக்கான ஏதேனும் ஒரு அழைப்பிதழை உள்ளீடு செய்து, அதிக அளவில் இ-பதிவு பெற்றது கண்டறியப்பட்டது.

இதை ஆய்வு செய்த தமிழகஅரசு, இ-பதிவு நடைமுறையில்திருமணம் என்பதற்கான வகைப்பாட்டை மட்டும் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x