7 தென் மாவட்டங்களின் தேவைக்காக ஒடிசாவில் இருந்து 78.82 டன் ஆக்சிஜன் வரத்து

ஒடிசாவில் இருந்து தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் வந்த திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகள். படம்: என்.ராஜேஷ்
ஒடிசாவில் இருந்து தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் வந்த திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தென் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களின் தேவைக்காக, ஒடிசா மாநிலத்தில் இருந்து 78.82 டன் ஆக்சிஜன், நேற்று சிறப்பு ரயில் மூலம் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு, பிரித்து அனுப்பப்பட்டது.

தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு, ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள ஸ்டீல் ஆலையில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் ஏற்றப்பட்ட 78.82 டன் ஆக்சிஜன், நேற்று மாலையில் சிறப்பு ரயில் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டது. ரயிலில் வந்த 5 டேங்கர் லாரிகளும், 7 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இப்பணிகளை கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில் ராஜ், எஸ்பி ஜெயக்குமார் உடனிருந்தனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, “திருநெல்வேலி மாவட்டத்துக்கு 15.18 டன், தென்காசிக்கு 1.5 டன், கன்னியாகுமரிக்கு 13.38 டன், தூத்துக்குடிக்கு 11.28 டன், சிவகங்கைக்கு 5.5 டன், தேனிக்கு 6 டன், மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 14.98 டன், மதுரை கல்யாண் கேசஸ் நிறுவனத்துக்கு 6 டன், அரசன் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனத்துக்கு 5 டன் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் பாதுகாப்புடன் லாரிகள் அனுப்பப்பட்டன. தென்மாவட்டங்களின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆக்சிஜன் பெற்றுள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலையில் பழுது சரி செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இங்கிருந்து ஆக்சிஜன் கிடைக்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in