

மாவட்ட மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 1,128 மருத்துவர் பணியிடங்களில் 301 பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளதாக தெரிகிறது. ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 64 இடங்கள் காலியாகவுள்ளன. திண்டுக்கல்லில் 51, திருநெல்வேலியில் 45, விருதுநகரில் 45, சிவகங்கையில் 40 என மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளன.
982 படுக்கை வசதிகள் உள்ள மருத்துவமனையில் 21 லட்சம் புறநோயாளிகளுக்கும், 6 ஆயிரத்து 500 பிரசவங்களுக்கும் ஆண்டுதோறும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதன் காரணத்தால் பொது மக்கள் பெரும் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்.
அனுபவமுள்ள மருத்துவர்கள் இல்லாததால் நெடுஞ்சாலை விபத்துகளில் சிக்குபவர்களை காப்பாற்ற முடியவில்லை. மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதியில்லாததால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
அதனால் தான் தருமபுரி, விழுப்புரம் என்று அடுத்தடுத்து குழந்தைகள் இறப்பு நிகழ்ந்தது. ஒரு அரசு மருத்துவமனையில் 8 மணி நேர பணிக்கு 26 செவிலியர்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில், தருமபுரியில் குழந்தைகள் இறந்த போது 4 செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. மக்களை காப்பாற்றுகிற பொறுப்பை செய்யாத ஆட்சியாளர்கள் அதற்குரிய விலையை கொடுக்காமல் தப்ப முடியாது'' என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.